புல்வாமா தாக்குதலை போன்ற தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு : 52 கிலோ எடை வெடிபொருள் பறிமுதல்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவை போன்ற ஒரு தீவிரவாதத் தாக்குதல் சதியை இந்திய ராணுவம் முறியடித்தது. அங்கிருந்து 52 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.காஷ்மீரின் கடிகல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள கரேவா என்ற இடத்தில், ஒரு நீர்த்தேக்கத் தொட்டியில், தலா 125 கிராம் எடையில் 416 பாக்கெட் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் மற்றொரு நீர்த்தேக்கத் தொட்டியில் 50 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் அந்த வெடிபொருள்களை கைப்பற்றினர். இந்த வெடிபொருட்கள் சூப்பர்-90 என்றும், சுருக்கமாக எஸ்-90 என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட இடம், கடந்தாண்டு 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் நடந்த இடத்துக்கு மிக அருகிலும், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் உள்ளது. இதிலிருந்து, புல்வாமா போன்றதொரு தாக்குதல் சம்பவத்தை தீவிரவாதிகள் அரங்கேற்றுவதற்கு திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புல்வாமா தாக்குதலுக்கு 35 கிலோ எடை கொண்ட ஆர்டிஎக்ஸ் வகை வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.  இதுதவிர ஜெலாட்டின் குச்சிகளும் தாக்குதலுக்கு கூடுதலாக பயன்படுத்தப்பட்டன.  பின்னர், இதற்கு பின்னணியாக செயல்பட்ட பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.

இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.  

இந்நிலையில், 52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளது.  இதனால் மற்றொரு புல்வாமா தாக்குதல் நடக்காமல் முன்பே முறியடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>