விவசாயிகளை பாதிக்கும் 3 மசோதாக்களை எதிர்த்த மத்திய அமைச்சரின் ராஜினாமா ஏற்பு : வேளாண் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி: விவசாயிகளை பாதிக்கும் 3 மசோதாக்களை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்த மத்திய பெண் அமைச்சரின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். மேலும், மத்திய வேளாண் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலிதளம் சார்பில் மத்திய அமைச்சராக உள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோண்மணி அகாலிதளம் கட்சியும், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று பேசிய சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மேலும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக உள்ள ஹர்ஷிமத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார்’ என்று தெரிவித்தார்.இதையடுத்து, ஹர்சிமத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்தார். அதில், ‘விவசாயிகளுடன் அவர்களது மகளாகவும், சகோதரியாகவும் நிற்பதில் பெருமை அடைகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆயிரக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் இருக்கின்றனர். விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காணாமல் சபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பவில்லை, அதனால் தான் நான் ராஜினாமா செய்தேன்’ என்றார். இந்நிலையில் குடியரசு மாளிகை இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி, அரசியலமைப்பின் 75வது பிரிவின் (2) பிரிவின் கீழ், உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில், மத்திய அமைச்சர்கள் குழுவில் இருந்து விலகிய ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும், பிரதமர் மோடியின் ஆலோசனையின் படி, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, தற்போதுள்ள இலாகா உடன் சேர்த்து உணவு பதப்படுத்துதல் துறையின் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விவசாயிகள் உற்பத்தி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மசோதா, விலை நிர்ணயம் மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா என, மூன்று அவசர சட்ட மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இதில் விவசாயிகள் ஒப்பந்த மசோதா நிறைவேறியது. அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த 15ம் தேதி, நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலி தளம் ஓட்டளித்தது. இதற்கிடையே, இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டில்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>