×

நாடு முழுவதும் 382 டாக்டர்கள் இறப்பு : தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 63 டாக்டர்கள் பலி

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் தற்போது வரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே முக்கிய காரணம் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கு உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளிப்படையாக தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியிடாமல் இருந்தது. இதையடுத்து இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள அந்தெந்த கிளை அலுவலகங்கள் மூலம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தது.

அதன்பேரில், இந்தியா முழுவதும் 382 டாக்டர்கள் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 63 டாக்டர்கள் உயிரிழந்து இருப்பதாக கூறியுள்ளது. இதில், அதிகபட்சமாக 50 வயது நிறைவடைந்த டாக்டர்கள் உயிரிழந்தனர். மற்றவர்கள் தற்போது பயிற்சி பெறும் டாக்டர்கள் உயிரிழந்து இருப்பதாக கூறியுள்ளது. இந்த உயிரிழந்த டாக்டர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் விவரங்களை தொடர்ந்து வெளியிடாமல் அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், கொரோனாவுக்கு இறக்கும் மருத்துவ பணியாளர்களை கூட  மறைத்து அவர்கள் உடல் ரீதியான பிரச்சனையால் உயிரிழந்ததாக கூறி வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் 63 டாக்டர்கள் உயிரிழந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் 43 டாக்டர்கள் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் இதை மறுத்துள்ளனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.Tags : doctors ,country ,Tamil Nadu , 382 Doctors, Death, Corona, Kills
× RELATED பத்து வயதிற்குள் பூப்படையும்...