குண்டும் குழியுமாக உள்ளது நாட்டரசன்கோட்டை சாலை ரொம்ப மோசம் -மண்டைகாயும் வாகன ஓட்டிகள்

சிவகங்கை : சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாய் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நாட்டரசன்கோட்டையை சுற்றிலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் நாட்டரசன்கோட்டை வந்து அதன் பிறகே சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி போன்ற ஊர்களுக்கு செல்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் சமாதியும் உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குண்டும் குழியுமாய் இருக்கின்றன. மதுரை, தொண்டி சாலை இணைப்பிலிருந்து நாட்டரசன்கோட்டை ஊருக்குள் வரும் சாலை பஸ் நிலையம் வரை மோசமான நிலையில் உள்ளது. மாணிக்கவள்ளித்தெரு வழியே காளையார்மங்கலம், ஒக்கூர் செல்லும் சாலை அடையாளமே இல்லாமல் உள்ளது. இவை இரண்டுமே பஸ் போக்குவரத்து உள்ள சாலைகளாகும். இதுபோல் 1வது வார்டு வெங்கடாசலபதி தெரு உள்ளிட்ட பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வரும் சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன.

திமுக நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலைகளை தவிர்த்துவிட்டு தனிப்பட்ட நபர்கள் சிலரின் விருப்பத்திற்கிணங்க புதிய சாலை அமைக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பஸ் போக்குவரத்துள்ள சாலைகள் சில மாதங்களிலேயே சேதமடைந்துவிட்டது. மோசமான சாலைகளால் முதியோர்களும், வாகன ஓட்டிகளும் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த அனைத்து இடங்களிலும் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>