×

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா: குடியரசு தலைவர் ஏற்பு

டெல்லி: உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக ராஷ்ட்ரபதி பவன் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு உணவு பதனிடுதல் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்கள் தேவையில்லை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று பேசிய சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கணவருமான சுக்பீர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா செய்வார் என்றும் தெரிவித்தார். இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவையில் விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இதனிடையே இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் ராஜினாமா செய்துள்ளது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஹர்சிம்ரத் கவுர், பஞ்சாபின் பதின்டா தொகுதியிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Harsimrat Kaur Badal ,President , Agriculture Bill, Harsimrat Kaur Badal, resignation, President of india
× RELATED தலைவருக்கு தெரிவிப்பதுபோல் துணை...