சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த வாழ்த்து கடிதத்தில், ‘மகிழ்ச்சிகரமான உங்களின் பிறந்தநாளில் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டிற்கு சேவை செய்ய நல்ல ஆரோக்கியத்துடனும், வலிமையுடன் பல ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது. ரஜினி, கமல் வாழ்த்து: பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் டிவிட்டரில், ‘சவாலான இந்த நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘கடினமான காலத்தில் நாட்டை மீட்க நல்ல உடல்நலம் மகிழ்ச்சி பலத்துடன் இருக்க வாழ்த்துக்கள்’ என்றார். ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், 70வது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் நூற்றாண்டு கடந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். பொது வாழ்வில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி சாதனைகளை படைக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.