×

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடெல்லி: `லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது,’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.  இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை கடந்த ஏப்ரல் முதல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தன.
இதனிடையே, நேற்று முன்தினம் எல்லை பிரச்னை பற்றி மக்களவையில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், `சீனா உடனான எல்லை பிரச்னையில் அமைதியான முறையில் சுமூகமான தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

அதே நேரம், போரிடவும் தயாராக இருக்கிறது. ,’ என்று தெரிவித்தார். இந்நிலையில், எல்லை பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ், திமுக, சிவசேனா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம்,  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்பதாக ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. மேலும், எல்லையில் முந்தைய நிலையை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின. காங்கிரசை சேர்ந்த ஆனந்த் சர்மா, ``இந்திய-சீன பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களின் மாஸ்கோ சந்திப்புக்கு பிறகு கடந்த 11ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, முந்தைய எல்லை நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று எடுத்து கொள்ளலாமா?’’ என்று கேட்டார். பின்னர் பேசிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ``ஏப்ரலுக்கு முந்தைய நிலையை தான் இறையாண்மை என்று குறிப்பிடுகிறீர்களா? கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எப்போதும் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்ததில்லை. ராணுவத்தினரும், இந்தோ-திபெத்திய எல்லை போலீசாரும் முன்பு போல எப்போதும் ரோந்து பணி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்,’’ என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ``கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காக்கில் 8 கி.மீ. தூரம், பிங்கர் 8 ஆகிய பகுதிகளில் முன்பு போல வழக்கமான ரோந்து செல்ல நமது வீரர்களை சீனப்படையினர் அனுமதிப்பதில்லை. அவர்கள் ரோந்து செல்வதை தடுத்து வருகின்றனர்,’’ என்று தெரிவித்தார்.

பின்பு பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், ``சீனா உடனான எல்லைப் பிரச்னையில் அரசுக்கு துணை நிற்போம். இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. ஏப்ரல் மாதத்துக்கு முந்தைய நிலைக்கு சீனப் படையினர் திரும்பி செல்ல வேண்டும்,’’ என்றார். திமுகவின் எம்பி.க்கள் திருச்சி சிவா, பி. வில்சன் ஆகியோரும் சீன எல்லை விவகாரத்தில் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லை பிரச்னை குறித்து அறிக்கை  தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியதாவது:

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதால்தான், சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. எல்லையில் ரோந்து செல்வது வழக்கமானது; நன்கு வரையறுக்கப்பட்டது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை, உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ரோந்து பணியில்தான் நமது வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.  எல்லை பிரச்னையில் இந்தியா அமைதியான தீர்வை விரும்புகிறது. அதே நேரம், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க ஒருபோதும் தயங்காது.   இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சொல்வது ஒன்று; செய்வது ஒன்று
அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அறிக்கையில் மேலும், ``எல்லை நிலைகளை மாற்றியமைக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா வேண்டும் என்றே செய்து வருகிறது. ராணுவ, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடக்கும் நிலையிலும் கூட, இரு தரப்பிலான ஒப்பந்தங்களை மீறி அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதன் மூலம், சீனா சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது என்பது தெள்ள தெளிவாகிறது,’ என கூறியுள்ளார்.

Tags : world ,soldiers ,border ,Ladakh ,Indian ,Rajnath Singh , No world power can stop Indian troops patrolling Ladakh border: Rajnath Singh
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்