×

ஐபிஎல் டி20 திருவிழா சீசன் 13 ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை கோலாகல தொடக்கம்

இந்தியாவின் முக்கிய விளையாட்டுத் திருவிழாவான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது.    உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாக்கும் இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடக்க உள்ளன. கொரோனா பிரச்னை காரணமாக இம்முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெறவில்லை.  இப்படி வெளிநாட்டில் ஐபிஎல் தொடர் நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 2வது ஐபிஎல் தொடர் முழுவதும் தென் ஆப்ரிக்காவின் டர்பன், ஈஸ்ட் லண்டன், செஞ்சுரியன், போர்ட் எலிசபத், ஜோகன்னஸ்பர்க், புளோயம்போன்டீன், கிம்பர்லி நகரங்களில் நடைபெற்றது.

 அதேபோல் 2014ம் ஆண்டும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 7வது ஐபிஎல் தொடரின் 20 லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, ஷார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் நடந்தன. இந்தியாவில் தேர்தல் முடிந்ததும், எஞ்சிய போட்டிகள் சென்னையை தவிர மற்ற நகரங்களில் வழக்கம் போல் நடைபெற்றன.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான உள்ளூர் போட்டிகள் 2014ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் தேர்தல் முடியாததால் சென்னைக்கு பதில் ராஞ்சி நகரில் நடந்தன. அதேபோல் 2018ம் ஆண்டு காவிரி பிரச்னை காரணமாக நடந்த போராட்டங்களால் சென்னையில் ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. எஞ்சிய உள்ளூர் போட்டிகள் புனே நகரில் நடந்தன.

வந்தார்கள்... சென்றார்கள்...

நடப்பு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் களமிறங்குகின்றன. ஆனால் 2011, 2012, 2013ல் முறையே 10, 9, 9 அணிகள் விளையாடின. அதன்படி 2011ம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் இந்தியா அணிகள் அறிமுகமாகின. இதில் கொச்சி டஸ்கர்ஸ் அணி அதே ஆண்டு விடைபெற, புனே வாரியர்ஸ் அணி 2013ம் ஆண்டு வரை களத்தில் இருந்தது. சூதாட்டப் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2016, 2017 சீசனில் தடை விதிக்கப்பட்டதால், அதனை ஈடுகட்ட அந்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் அறிமுகமாகின. சென்னை, ராஜஸ்தான் அணி வீரர்கள் பலரும் இந்த அணிகளுக்காக களம் கண்டனர்.

ஐபிஎல் போட்டிகள் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அறிமுகமான டெக்கான் சார்ஜர்ஸ் (ஐதராபாத்) அணி 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 2012ம் ஆண்டுடன் விடைபெற்றது. அதற்கு பதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் என்ற புதிய அணி அறிமுகமாகி தொடர்ந்து விளையாடி வருகிறது. அதேபோல் 2008ம் ஆண்டே அறிமுகமான டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் பெயர் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ரசிகர்கள் இல்லாமல்...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூட்டிய அரங்குகளில், ரசிகர்கள் இல்லாமல் கடும் கெடுபிடிகளுக்கு இடையே போட்டிகள் நடக்க இருந்தாலும், தங்கள் அபிமான அணிகளில் இடம் பெற்றுள்ள சூப்பர் ஸ்டார்களின் ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பில் கண்டு களிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனில் பிற்பகல் ஆட்டங்கள் 3.30 மணிக்கும், இரவு ஆட்டங்கள் 7.30 மணிக்கும் தொடங்க உள்ளன. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் ஒளிபரப்பாகின்றன. நாளை இரவு 7.30க்கு தொடங்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெறும்.

அணிகளும் சாதனைகளும்...
சென்னை சூப்பர் கிங்ஸ்: இதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் 10 தொடர்களில் மட்டுமே சென்னை அணி விளையாடி உள்ளது. அதில் 10 முறையும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையை சென்னை அணி படைத்துள்ளது. அதுதவிர 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3 முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: எல்லா தொடர்களிலும் விளையாடி உள்ள மும்பை அணி 8 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் 4 முறை கோப்பையை கைப்பற்றி, அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:  அனைத்து சீசனிலும் விளையாடிய கொல்கத்தா 6 முறை நாக் அவுட் சுற்றில் விளையாடி உள்ளது. அதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2 முறையும் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:  தொடர்ந்து 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் 10 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளது. அதில் 4முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் முதல்முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை சொந்தமாக்கி உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:  புதிய அணியாக 2013ம் ஆண்டு அறிமுகமான ஐதரபாத் அணி 7 முறை ஐபிஎல் தொடர்களில் களம் கண்டுள்ளது. அதில் 5 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஐதராபாத் அணி, ஒருமுறை 2வது இடத்தையும் பிடித்து சாதனை செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு முன்பு ஐதராபாத் அணியாக இருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 டெல்லி கேப்பிடல்ஸ்:  மொத்தமாக 12 தொடர்களிலும் விளையாடிய டெல்லி அணி 4 முறை நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதில் 2012, 2019ம் ஆண்டுகளில் 3வது இடம் பிடித்ததே அதிகபட்ச சாதனை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: எல்லா தொடர்களிலும் களம் கண்டுள்ள பஞ்சாப் அணி 2முறை மட்டுமே நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. அதில் 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப், அதில் 2வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஒவ்வொரு முறையும் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாகக் கணிக்கப்பட்டு கம்பீரமாகக் களமிறங்கும் பெங்களூர் அணி, 5 முறை நாக் அவுட் சுற்றுக்கும், 3 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. விராத் கோஹ்லி, டி வில்லியர்ஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் இந்த அணியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியாதது சாபக்கேடாகவே தொடர்கிறது.



Tags : IPL T20 Festival Season ,United Arab Emirates , IPL T20 Festival Season 13 kicks off tomorrow in the United Arab Emirates
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...