×

பல்கலை.களில் கல்வி கட்டணத்தை செலுத்த மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம்: வழங்கும்படி உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘கல்விக் கட்டணத்தை செலுத்த மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கும்படி பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட முடியாது,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், யுஜிசி.யின் உத்தரவுப்படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது,’ என கடந்த மாதம் 28ம் தேதியும், அதே போன்று பல்கலைக் கழங்கங்கள், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம், 2ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என கடந்த 3ம் தேதியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இத்தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செய்து வருகின்றன.

 இந்நிலையில், சட்டக் கல்லூரி மாணவரான ராலே ராணா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் இரு தினங்களுக்கு முன் புதிய வழக்கை தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘கொரோனா வைரஸ் பிரச்னையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள்,  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  அதனால், இதுபோன்ற சூழலில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை அளிக்கவும், கட்டணத்தை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசமும் வழங்க வேண்டும். இது குறித்து யுஜிசி, பார் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்..

நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ‘பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்குவதோ அல்லது அதனை தளர்த்துவதோ மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கொரோனோ காலத்தில் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.’ என வாதிட்டார்.   இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கல்விக் கட்டணத்தை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. வேண்டுமானால், மனுதாரர் அவரது மாநிலம் சார்ந்த உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கேட்கலாம்.’ என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.


Tags : universities ,Cannot ,Supreme Court , Extra opportunity for students to pay tuition fees at universities: Cannot order to grant: Supreme Court notice
× RELATED அர்ஜெண்டினாவில்...