×

கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் பாஜ எம்பி உடல்நிலை கவலைக்கிடம்

பெங்களூரு: கொரோனாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக பாஜ மாநிலங்களவை எம்பி அசோக் கஸ்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் நாட்டில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த 8 மாதங்களில் இவர்களில் உயிர் பலி என்பது எதுவுமின்றி இருந்து வந்தது. மத்திய அமைச்சரவையில் அமித்ஷா உட்பட இதுவரையில் 9 அமைச்சர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை பெற்று குணமாகி விட்டனர்.

இன்னும் சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திராவை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவை எம்பி. பல்லி துர்கா பிரசாத் ராவ் (63) நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம், பல்லாரியை சேர்ந்த பாஜ மாநிலங்களவை எம்பி அசோக் கஸ்தி (55), கடந்த 3ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அசோக் கஸ்தி, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருடைய முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அசோக் கஸ்தி பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர். பாஜ.வில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக கட்சியின் மேலிடம், டெல்லி மாநிலங்களவை உறுப்பினராக அவரை நியமித்தது.

குளறுபடி
அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால், இவருடைய மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால், இவர் இறக்கவில்லை. கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்றிரவு அறிவித்தது. இந்த குளறுபடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Corona ,Bajaj ,Karnataka , Corona vulnerability: Bajaj MP health concern in Karnataka
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி