×

வண்டலூர், பல்லாவரத்தில் 136 கோடியில் 2 புதிய மேம்பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பில் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதேபோல், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 80 கோடியே 74 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். முன்னதாக பல்லாவரம் வருகை தந்த தமிழக முதல்வரை பல்லாவரம் நகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தன்சிங் மற்றும் பல்லாவரம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும், கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 1 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் 2 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 165 கோடியே 98 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், புறவழிச்சாலை, பாலங்கள், உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். ராஜிவ்காந்தி சாலையில், டைடல் பார்க் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 108 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 `யூ’’ வடிவ மேம்பால பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பல்லாவரம் மற்றும் வண்டலூரில் பல்வேறு பிரச்னைகளால் தாமதமாகி வந்த மேம்பால பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 21.96 கோடி செலவில் நடந்து வரும் கொரட்டூர் சுரங்கப்பாதை பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன. இந்த மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  கொளத்தூரில் 41 கோடி செலவில் நடந்து கொண்டிருக்கிற வலதுபுற மேம்பால பணிகள் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் பணிகள் நிறைவடையும். திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்சட்டி சாலை உயர்மட்ட பாலம் ₹58.64 கோடி செலவில் நடந்து வருகிறது.

55 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வேளச்சேரி மேம்பாலமும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 19.75 கோடி செலவில் தாம்பரம் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன.  குரோம்பேட்டை, ராதா நகர் வரையறுக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 28.99 கோடி செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த பணிகள் முடிவடையும். 206 கோடி செலவில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பால பணிகள் 2022ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடையும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் கார்த்திக், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என்.சாந்தி, தலைமை பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) செல்வன், தலைமை பொறியாளர் (பெருநகரம்) சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Vandalur ,Pallavaram , The Chief Minister inaugurated 2 new flyovers at a cost of Rs. 136 crore at Pallavaram, Vandalur
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...