×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு  சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.  

சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய 455 குழந்தைகள், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், பிறவி இதய குறைபாட்டுடன் கூடிய 3 குழந்தைகள், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், நிமோனியா பாதித்த 8 குழந்தைகள், பிறவி குறைபாடுடன் கூடிய 5 குழந்தைகள், குடல்வால் உள்ளிட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 குழந்தைகள் மற்றும் தீவிர தொற்றுடன் பாதிக்கப்பட்ட 10 பச்சிளம் குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு மொத்தம் 944 குழந்தைகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இதை தவிர தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள்  மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Tags : children ,Minister Vijayabaskar , Special treatment for 45,000 children affected by corona infection: Minister Vijayabaskar
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...