×

தாமிரபரணியில் நீராட தடை: மகாளய அமாவாசையொட்டி இன்று நீர்நிலைகள் வெறிச்சோடின

நெல்லை: இன்று மகாளய அமாவாசையையொட்டி கொரோனா காரணமாக நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்று பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை இன்று (17ம்தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகள், கடற்கரைக்கு வந்து நீராடி தர்ப்பணம் கொடுப்பர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றில் 5 நாட்கள் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால் பாபநாசம், குறுக்குத்துறை, அருகன்குளம், சீவலப்பேரி, வண்ணார்பேட்டை பேராத்து செல்வியம்மன் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றின் பகுதிகளில் இன்று காலை முதலே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திதி, தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் பாபநாசம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் யாரும் உள்ளே இறங்கதவாறு கயிறு கட்டி வைத்திருந்தனர். இதனால் வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். ஆனால் பாபநாசம் கோவிலுக்குச் செல்ல எவ்வித தடையும் விதிக்கப்படததால் கோவிலுக்கு பக்தர்கள் முககவசம் அணிந்து சென்று வந்தனர்.

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்பவர்களை கண்காணிப்பதற்காக டாணா பகுதியில் போலீசார் சோதனை சாவடி அமைத்து பாபநாசத்தில் குளிக்க அனுமதியில்லை என்பதை சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்து வருகின்றனர். இதனால் தாமிரபரணி உள்ளிட்ட நீர்நிலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

தர்மம் எடுக்க முடியாமல் தவிப்பு
மகாளய அமாவாசையன்று பொதுமக்கள் நீர் நிலைகளில் நீராடு வழக்கமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து உணவு, பணம் ஆகியவற்றை பிச்சைக்காரரர்களுக்கு தானம் வழங்குவர். ஆனால் தற்போது நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தானம் பெற வந்தவர்கள் உணவு, பணம் உள்ளிட்ட உதவிகள் கிடைக்காமல் திண்டாடினர்.

Tags : Tamiraparani ,Mahalaya New Moon , Ban on bathing in Tamiraparani: Water bodies deserted today due to Mahalaya New Moon
× RELATED தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு