வடமாநில நாடோடிகளால் நோய்தொற்று அபாயம்: அப்புறப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய மீஞ்சூர் பேரூராட்சியில், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே அரியன்வாயல் பகுதி உள்ளது. இங்குள்ள தனியார் நிலங்களை ஆக்கிரமித்து, நீண்ட காலமாக வடமாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாடோடிகளாக வசித்து வருகின்றனர். இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இவர்கள் இறந்த ஆடு, மாடு, கோழி, மீன்களை உண்பது, திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பது, நீர்நிலைகளை அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், அவர்களின் சிறுகுழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பது, வழிப்பறி, பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது என பல்வேறு சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் சுகாதாரமற்ற முறையில் சுற்றியுள்ள ஊர்களில் திரிந்து வருவதால், அந்தந்த பகுதி மக்களுக்கு மீண்டும் கொரோனா நோய்தொற்று அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இவர்களை அரியன்வாயல் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொன்னேரி கோட்டாட்சியர் உள்பட மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்களை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. அவர்களை அகற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து விரைவில் அரியன்வாயல் பகுதியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>