×

மகாளய அமாவாசையையொட்டி மக்கள் குவிந்தனர்; திருவள்ளூர், திருத்தணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: சமூக இடைவெளி காற்றில் பறந்தது

திருவள்ளூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளம் பூட்டப்பட்டது. இதனால் காக்களூர் ஏரிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து விட்டு சாமி தரிசனம் செய்ய, நேற்றிரவே தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து திரளானோர் குவிந்தனர். கொேரானா தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி வீரராகவ பெருமாள் கோயிலில் நேற்று மதியம் 12 மணி முதல் இன்று மகாளய அமாவாசை வரை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. மேலும் குளத்திற்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால் குளத்தையும் பூட்டி விட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு முதல் கோயிலை சுற்றி ஏராளமான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் இன்று காலை காக்களூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோயில் அருகே 100க்கும் மேற்பட்ட புரோகிதர்களிடம், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் நுழைவு வாசலில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டனர். மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் எஸ்ஐக்கள் சக்திவேல், தேன்மொழி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதில் அதிகாலை முதலே திருத்தணி முருகன் கோயில் சரவண பொய்கை குளத்தில் மக்கள் குவிந்தனர். அவர்கள் குளக்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

வேத விற்பன்னர்கள் மந்திர சொல்ல தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் அந்த மந்திரங்களை சொல்லி பூஜை நடத்தினர். பின்னர் பூஜை  செய்த பொருட்களை தண்ணீரில் விட்டுச் சென்றனர். இதன்பின் மலைக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பல இடங்களில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. பலர் முக கவசம் அணியாமல் கலந்துகொண்டனர். இதுபோல் திருத்தணி நல்லாங்குளத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags : occasion ,ancestors ,Darbhanam ,Tiruvallur ,Thiruthani , Mahalaya Amavasaya, Tiruvallur, Thiruthani, Darbhanam, Social Gap
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...