×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான வெப்ப பரிசோதனை கருவி

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை கருவி செயல்படாமல் காட்சி பொருளாக மாறிவிட்டது. இதனால் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாள்தோறும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா நோய்தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு, இம்மாத துவக்கத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வரும் மக்களுக்கு ஆங்காங்கே தமிழக அரசின் சார்பில் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதற்கென பேருந்து நிலைய நுழைவுவாயில் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட்டு உள்ளது.

இதில் பயணிகள் விரலை வைத்து, தங்களது உடலில் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதித்து கொள்ளலாம். ஆனால், இக்கருவி கடந்த சில நாட்களுக்கும் மேலாக வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. அங்கு டாக்டர், மருத்துவ பணியாளர் யாருமின்றி, ஒரு காவலர் மட்டுமே பணியில் இருக்கிறார். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் வாயிலாக மீண்டும் சென்னை நகரில் கொரோனா நோய்தொற்று பரவும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறுவதற்கு தேவையான டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : bus stand ,Coimbatore , Coimbatore, Bus Stand, Thermal Testing Equipment
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை