×

சென்னை லேடி வெலிங்டன் உள்பட 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை


சென்னை: தமிழகத்தில் 4 பி.எட் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள், சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாலும் தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதிய அளவு நிரம்பி விட்டதாலும் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேற்கண்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு வாய்ப்பு இல்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 600 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.

தற்போது 136 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 71 பிஎட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்தநிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிமுறைகள் பின்பற்றாத 4 அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த ஆகஸ்ட் மாதம் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கீகாரம் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நிலுவையில் வைத்துள்ள கல்லூரிகள் மற்றும் தகுதிகள் குறைவாக உள்ள கல்வியியல் கல்லூரிகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டது. சென்னை, புதுக்கோட்டை மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள 4 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சமர்ப்பிக்காததாலும், குமாரபாளையத்தில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாலும், புதுக்கோட்டை கல்லூரியில் கல்லூரி ஆசிரியர் விதிப்படி நியமிக்கப்படாததாலும் இந்த 4 கல்லூரிகளில் வரும் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.

Tags : B.Ed ,colleges ,Chennai ,Lady Wellington , Chennai, Lady Wellington, 4 Government, B.Ed Colleges, Student Admission, Prohibition
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...