×

இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: ‘‘தற்போது வரையான கொரோனாவின் தாக்குதல் ஆரம்ப நிலை மட்டும்தான். பல நாடுகள் அலட்சியமாக கொரோனாவை எதிர்கொள்கின்றன. இதனால் கொரோனாவின் 2வது அலையை தவிர்க்கவே முடியாது. அது அபாயகரமானதாக இருக்கும்’’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 9.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதுவரை 82,066 பேர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதுவரையிலான கொரோனா தாக்குதல் என்பது ஆரம்ப கட்டம்தான். இனிமேல்தான் தாக்குதல் தீவிரமாகும்.

உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை பரவுவது நிச்சயம். அதை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து உலகின் தலை சிறந்த மருத்துவ நிபுணரும், உலக சுகாதார அமைப்பின் பொது நிர்வாக இயக்குனருமான டேவிட் நபாரோ, லண்டனில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்களின் கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் குறித்து தற்போது கவலையே இல்லாமல் பல நாடுகள் செயல்படுகின்றன. இது மிகப்பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். வரக்கூடிய அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய சமயம் இது. இதுவரையிலான கொரோனாவின் தாக்குதல் என்பது வெறும் துவக்க நிலைதான். இன்னும் நடுக்கட்டத்தை அடையவில்லை. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடம் தற்போது அலட்சியப் போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனாவின் 2வது அலை நிச்சயம். அதை தடுக்க முடியாது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் இதுவரை கொரோனா உள்ளது. இந்நிலையில் 2வது அலை வந்த பின்னர், உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேலும் மோசமான நிலையை எட்டும். குறிப்பாக உலகம் முழுவதும் ஏழைகள், தங்கள் வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து, இருமடங்கு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பை சீனா விலைக்கு வாங்கி விட்டது என்றும், அதனால் கோவிட்-19 விஷயத்தில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டேவிட் நபாரோ கூறுகையில், ‘‘முற்றிலும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை போம்பியோ கூறி வருகிறார். கோவிட்-19 வைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும், முழுவீச்சில் எங்களது ஆராய்ச்சிகள் தொடர்கின்றன’’ என்று தெரிவித்தார்.

Tags : Corona ,World Health Organization , Corona, 2nd wave, sure, World Health Organization, warning
× RELATED திருச்சுழி அருகே குதிரை படத்துடன் 800...