×

ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவதி

திருப்பூர்: ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு, சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணி ஆகியும், புற நோயாளிகள் பிரிவில் 50க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மருத்துவர்கள் இல்லாததால் தொடர்ந்து பல்வேறு நோய் மற்றும் உடல் உபாதைகளுடன் நோயாளிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் குமார் கூறியதாவது: மருத்துவமனையில் வெளிநோயாளி  பிரிவு தனியாகவும், சற்று தொலைவில் உள்ள கட்டிடத்தில் உள் நோயாளிகள் பிரிவும் உள்ளது. ஒரே ஒரு மருத்துவர் மட்டும் பணியில் உள்ளார். உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்கள், பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உள்நோயாளிகள் பிரிவில் ஒரு மருத்துவரும், புற நோயாளிகள் பிரிவில் மற்றொரு மருத்துவர் என தனித்தனியாக ஏற்பாடு செய்தால், பொதுமக்களுக்கு உடனடி சிகிச்சை கிடைத்து வீடு திரும்புவார்கள். தற்போது கொரோனா தொற்று உச்சத்தை எட்டியிருப்பதால், மருத்துவமனைக்கு வருபவர்களை காத்திருக்க வைக்காமல் உடனடியாக அனுப்பி வைப்பது நல்லது. இது தொடர்பாக திருப்பூர் கலெக்டருக்கு புகார் அளித்துள்ளோம் என்றார்.

Tags : doctors ,Uthukkuli Government Hospital , Uthukkuli, Government Hospital
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை