×

ஆண்டிபட்டி அருகே கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள மும்மூர்த்தி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் மும்மூர்த்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வாலூத்து ஓடை, பளியன் சுனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த கண்மாய் நீரால் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும். மும்மூர்த்தி கண்மாயில் இருந்து மொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

இந்நிலையில் மும்மூர்த்தி கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது துவரை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்பட்டாலும் தண்ணீர் தேங்க இடமில்லாமல் வீணாக வெளியே செல்கிறது. இதனால் அருகில் உள்ள கிராமமக்கள் கண்மாய் தண்ணீரை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். கண்மாயை தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தற்போது புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andipatti , Andipatti, Agriculture
× RELATED விவசாயத்தை பாதுகாக்க கோரி ஏரலில் போராட்டம்