×

திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் 'திராவிடப்பள்ளி'யை தொடங்கிவைத்தார் மு.க.ஸ்டாலின்!!

சென்னை :  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் துவக்கப்படும், திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அஞ்சல் மற்றும் இணைய வழிக் கல்வி முறையிலான திராவிடப்பள்ளியை, சென்னை - அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில், காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மதிப்பிற்குரிய பேராசிரியர் சுப.வீ அவர்களின் சீரிய முயற்சியால், இன்று திராவிடப் பள்ளி தொடங்கி வைக்கப்படுகிறது. இன்று ஈரோட்டுச் சிங்கம் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள். நேற்று முன்தினம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறந்தநாள் இன்று.

இந்த மூன்று விழாக்களான  முப்பெரும் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம்முடைய பேராசிரியர் அண்ணன் சுப.வீ. அவர்கள் இந்தத் திராவிடப் பள்ளியைத் தொடங்கி வைத்திருக்கிறார் என்று சொன்னால், அது மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

நம்முடைய  பேராசிரியர் சுப.வீ. அவர்கள், நான் இளைஞர் அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய நேரத்தில், இளைஞரணித் தோழர்களுக்குத் திராவிட இயக்கத்தின் வரலாற்றை - சமூகநீதியின் கோட்பாடுகளைப் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் மூலமாகத் தமிழகம் முழுவதும் வலம் வந்து, அதைச் சிறப்புடன் நடத்தித் தந்தவர்.

அப்படிப்பட்ட அண்ணன் சுப.வீ. அவர்கள் இன்றைக்கு நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு, திராவிட இயக்கத்தின் வரலாற்றை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தத் திராவிடப் பள்ளியை உருவாக்கி இருக்கிறார். அதை இன்று நான் தொடங்கி வைக்கிறேன்.

இந்த அரிய வாய்ப்பைத் தந்த அண்ணன் சுப.வீ. அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ந்து வருகிற இந்தத் தொழில்நுட்பக் காலத்தில் ஒரு அருமையான நிலையில் இந்தத் திராவிடப் பள்ளியை, மக்களிடத்தில், குறிப்பாக, இளைஞர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்தப் பணியை அவர் தொடங்கி இருக்கிறார்.திராவிடத் தத்துவத்தின் கொள்கைகள் நிலைப்பெற்றிட -  வெற்றி பெற்றிடத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.



Tags : MK Stalin ,generation ,Dravidian , Dravidian Movement, Historical Achievements, 'Dravidian School', MK Stalin
× RELATED தேர்தலில் வாக்களித்தது புதிய...