×

மதுரை-மானாமதுரை இடையே ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்

மானாமதுரை: மதுரையில் இருந்து மானாமதுரை வரையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணி மானாமதுரை வரை நடந்து வருகிறது.

நாடு முழுவதும் அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலும் மானாமதுரையில் இருந்து விருதுநகர் வரையிலும் மானாமதுரையில் இருந்து திருச்சி வரையிலும் மின்மயமாக்கும் பணியை தனியார் பங்களிப்புடன் ரயில்வே மின் மயமாக்கல் துறை செய்து வருகிறது. இதில் மானாமதுரை வரை 47 கி.மீ., தூரமுள்ள பாதையை மின்மயமாக்கும் பணியினை கடந்த பிப்ரவரி 15ம் தேதி ரயில்வே பொதுமேலாளர் ஒய்.பி.,சிங் துவக்கி வைத்தார். மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரயில்பாதையின் ஓரமாக மின்கம்பங்கள் நடும் பணி தற்போது நடக்கிறது. இதற்காக இரும்பு மின்கம்பங்கள் தனி ரயிலில் எடுத்து வரப்பட்டு அதற்கென உள்ள கிரேன் உதவியுடன் நிறுவும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில்., மதுரையில் இருந்து சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், கால்பிரிவு வரை மின்கம்பங்கள் நடப்பட்டு காங்கிரிட் கலவை போடப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. இதன்பிறகு அந்த கம்பங்களில் மின் ஒயர்கள் பொருத்தப்பட்டு மின்கம்பங்களுக்கு மின்விநியோகம் செய்ய மின்நிலையங்கள் அமைக்கப்படும். அதன்பின் மின்சாரத்தில் இயங்கும் ரயில் இஞ்சின்கள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டத்திற்குப்பின் ரயில்கள் அனுமதிக்கப்படும் என்றார்.

Tags : Madurai ,Manamadurai , Madurai, Manamadurai, Railway
× RELATED அக். 25ல் ஆயுத பூஜை கொண்டாட்டம்...