×

நாளுக்கு நாள் சாலை சுருங்குவதால் பேட்டையை காலி செய்யும் தொழில் நிறுவனங்கள்

பேட்டை: நெல்லை - பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வாகன போக்குவரத்துக்கு வசதியாக தொழில் நிறுவனங்கள், பேட்டையை காலி செய்ய துவங்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படும் பாளையும், தாமிரபரணி வளம் கொழிக்கச் செய்யும் நெல்லையும் இரட்டை நகரங்கள் எனப்பெயர் பெற்றவை. அக்காலத்தில் இந்நகரையொட்டிய மேற்கு பகுதியான பேட்டையை விரிவாக்க பகுதியாக மாற்ற சிப்காட் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு அலுமினிய உருக்காலை, சில்வர், பித்தளை, செம்பு, எவர்சில்வர், அலுமினிய பட்டறைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், மெத்தைகள், காகித உற்பத்தி, ஸ்டீல் உற்பத்தி, ரேடியோ நிலையம் என தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. இதுதவிர அரசு சார்பில் டான்சி நிறுவனமும், அரசு ஐடிஐயும் அமைக்கப்பட்டது.

சிறந்த நீராதாரம், வேலை வாய்ப்பு, அருகிலேயே கல்வி நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை கருத்தில் கொண்டு ஏராளமானோர் பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடியேறினர். இதனால் பேட்டை மட்டுமின்றி சுற்றுவட்டாரமும் வேகமாக வளர்ச்சியை பெற்றது. நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தில், நெல்லையின் தென்மேற்கு பகுதியில் இருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட பேட்டை வழியாகத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில் அவற்றுக்கான சுங்க கட்டணம் வசூலிக்கும் அலுவலகமாக, தற்போது பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வரும் இடம் இருந்துள்ளது. மேலும் வத்தல், மல்லி, தானிய மால்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து வாணிபம் நடந்து வந்தது. நறுமண பொருட்கள் சந்தைப்படுத்தலும் பேட்டையில் சிறந்து விளங்கியது.

அகன்று விரிந்த சாலைகள், சிறந்த போக்குவரத்து கட்டமைப்பு போன்றவற்றால் பொருளாதாரத்தில் சிறந்த பேட்டை, பல்வேறு தொழிற்சாலைகள் அமையப் பெற்றதன் எதிரொலியாக தொழிற்பேட்டையாக மாறியது. இங்கிருந்து பொருட்களை சந்தைப்படுத்திட ஏதுவாக சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இவை தவிர ரயில் நிலையம் அருகிலேயே ஆயில் கார்ப்பரேஷனும் இயங்கி வந்தது. சாலை, குடிநீர், இருப்பு பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒருங்கிணைந்து அமையப் பெற்றதால் பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றனர். நாளடைவில் பெருகத் துவங்கிய வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் தொழிற்பேட்டை என்ற பெயருக்கு வேட்டு வைக்கும் வகையில் சாலையை ஆக்கிரமிக்க துவங்கின. இதனால் டவுன் காட்சிமண்டபம் துவங்கி பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப், காவல் நிலையம் பஸ் நிறுத்தம் என சுத்தமல்லி அடுத்த சங்கன்திரடு வரை சாலை சுருங்கி 10 அடிக்குள் மாறியது. குறிப்பாக செக்கடி வாய்க்கால் பாலம் முதல் அரசு மருத்துவமனை வரை வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் வழிவிட முடியாத அளவுக்கு சிறிய சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் அன்றாடம் பள்ளி, கல்லூரி, வேலைகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு டவுன், சந்திப்பு, பாளை பகுதிக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுதவிர தொழிற்சாலைகளுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், சில திருப்பங்களை கடப்பதற்குள் ஓட்டுநர்கள் படும்பாடு சொல்லிமாளாது. தற்போது பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், பேட்டை பகுதிக்குள் வர மறுப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தொழிற்நிறுவனங்களை அதன் உரிமையாளர்கள் காலி செய்து கங்கைகொண்டான், தென்காசி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடமாற்றி வருகின்றனர்.

தொழிற்சாலைகள் வரிசைகட்டி இடமாறுவதால் வேலைவாய்ப்புகள் பறிபோய் பொதுமக்களின் பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் மக்களும், போக்குவரத்து வசதியை காரணம் காட்டி பாளை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம்பெயரத் துவங்கியுள்ளனர். சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பேட்டை வழியாக நெல்லைக்கு சென்று வந்தவர்களும், மேலப்பாளையம் - அம்பை சாலை என பிற சாலைகளை தேர்வு செய்ய துவங்கி விட்டனர்.
இதுகுறித்து பேட்டை பகுதி மக்கள் கூறுகையில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சில இடங்களில் மெயின்ரோடுகள், குறுகலான சந்துகளாக மாறிவிட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களே முன்வந்து அகற்றி பாசாங்கு செய்கின்றனர். இதனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடும்போது ஓரிரு நாளில் மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் மீண்டும் சுருங்கிய சாலையாக மாறி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நீதிமன்றங்கள் பல வழக்குகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த போதிலும் அதிகாரிகளின் கண்துடைப்புகளால் போக்குவரத்துக்கு உரிய சாலை வசதியில்லை என தொழிற்சாலைகள் இடம்பெயர துவங்கி விட்டன. இந்நிலை தொடர்ந்தால் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பேட்டை பகுதி பொதுமக்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி தொழிற் நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் புறவழிச்சாலை திட்டமும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தொழில் புரட்சியில் அசுர வளர்ச்சியடைந்த பேட்டை பகுதி, தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைப்போல் தொழில் வேலை வாய்ப்பற்ற பகுதியாக மாறி வருவது கவலைக்குரியதே.

Tags : Businesses ,road , Industry companies, Pettai
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...