×

தென்தாமரைக்குளம் அருகே சளி மாதிரி கொடுக்காத பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது என்ன?

நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரம் அருகே சளி மாதிரி கொடுக்காத பெண்ணுக்கு, கொரோனா பாசிட்டிவ் என கூறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டு கொண்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் வகையில் சுகாதார பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தென்தாமரைக்குளம் அருகே உள்ள ஈச்சன்விளை பகுதியை சேர்ந்த, 55 வயது பெண் ஒருவர் சளி மாதிரி பரிசோதனைக்கு கொடுக்காமலேயே, அவருக்கு திடீரென கொரோனா பாசிட்டிவ் என தகவல் கூறி, மருத்துவமனைக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பெண்ணின் மகள், வாட்ஸ் அப் மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் தவறு செய்துள்ளனர் என்பதை, சுட்டி காட்டி வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அந்த உரையாடலில் இளம்பெண் கூறியிருப்பதாவது: எனது தாய், அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சைக்காக செல்வார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சைக்கு சென்ற போது, அவருக்கு சளி மாதிரி எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். ஆனால் சளி மாதிரி எதுவும் எடுக்க வில்லை. எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். மறுநாள் திடீரென கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து போன் வந்தது. போனில் பேசிய என்னிடம், எனது அம்மா பெயரை கூறி கொரோனா பாசிட்டிவ் என்றும், உடனடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றனர். நான் எனது அம்மாவிடம் இது குறித்து கேட்ட போது, நான் பரிசோதனையே செய்ய வில்லை என்றார்.  இதனால் சந்தேகம் அடைந்து, நாகர்கோவிலில் உள்ள விவேக் லேப் சென்று நேற்று முன் தினம் சளி மாதிரி கொடுத்ேதாம். நேற்று மதியம் பரிசோதனையில் எனது தாயாருக்கு நெகட்டிவ் என வந்தது.

ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சளி மாதிரியே எடுக்காமல் எனது தாயாருக்கு கொரோனா என கூறினர். 4 நாட்கள் மட்டுமாவது இருந்து விட்டு வர சொல்லுங்கள். அதிகாரிகளுக்கு தெரிந்தால் எங்களுக்கு சிக்கலாகி விடும். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறினர். இந்த தவறுக்கு யார்? பொறுப்பு என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா என பயந்து, என் தாய்க்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் யார் பொறுப்பாவார். எனவே இந்த பதிவு கலெக்டரின் கவனத்துக்கு செல்லும் வரை ஷேர் செய்யுங்கள் என கூறி இருந்தார். இதற்கிடையே நேற்று மாலை சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்சு வருவதாக கூறப்பட்டதால், பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டு இருந்தனர். ஆனால் நேற்று இரவு வரை ஆம்புலன்சு வரவில்லை.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்ட பெண் கொரோனா பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டு தனது பெயர், முகவரி, செல்போன் எண் எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். இதை பதிவு செய்து கொண்ட பணியாளர்கள், பரிசோதனை கிட்டில், அவருக்கான பதிவு எண்ணையும் எழுதி உள்ளனர். பரிசோதனை செய்ததாக பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட ெபண் பரிசோதனைக்கு சளி மாதிரி எதுவும் கொடுக்கவில்லை என வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம். எங்கு தவறு நடந்தது என்பது தெரியவில்லை. ஒரு வேளை இந்த பெண்ணுக்கான பதிவு எண் எழுதிய கிட்டில், வேறொருவரின் மாதிரியை வைத்து அனுப்பினார்களா?  என்பதும் தெரியவில்லை. விசாரணைக்கு பின் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கோவிட் மையங்கள் மூடல்

குமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,311 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,257 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 217 பேர் உயிரிழந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோணம் இன்ஜினியரிங் கல்லூரியில் சிகிச்சையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வந்த கோவிட் கவனிப்பு மையம் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெல்பீல்டு பள்ளியில் இருந்த கோவிட் மையமும் காலி செய்யப்பட்டு உ்ளளது. நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : Corona ,health center ,Thendamaraikulam , Nagercoil, Primary Health Center
× RELATED மாப்பிள்ளையூரணி சுகாதார நிலையத்தில் செவிலியர் தினம் கொண்டாட்டம்