திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா நடத்தப்படுமா?

நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைண திருப்பதிகளில் ஒன்றாக விளங்குகிறது. 8ம் நூற்றாண்டுக்கு முந்தைய பழமை வாய்ந்த கோயில் இது ஆகும். 3.23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 22 அடி நீளத்தில் மூலவர் ஆதிகேசவ பெருமாள் அனந்தசயனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 410 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2004ம் ஆண்டு இக்கோயிலில் தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த முடிவானது. ரூ.5.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் திருப்பணிகள் நிறைவு பெறவில்லை. திருப்பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலில் ஐப்பசி திருவிழா மற்றும் பங்குனித்திருவிழா என்று இரு கால கட்டங்களில் திருவிழாக்கள் நடத்தப்படும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களுக்கு ஒப்பாக இங்கும் விழாக்கள் நடத்தப்படும். பங்குனி திருவிழா கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அப்போது நடத்தப்படவில்லை. இந்தநிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பங்குனி மாதம் நடத்தப்பட வேண்டிய திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. 19ம் தேதி ஆராட்டுடன் நிறைவு பெறுகிறது. அதே வேளையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளால் எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படாதது பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயில் சேவா டிரஸ்ட் தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஐப்பசி, பங்குனி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா, கொடியேற்றுடன் தொடங்கி ஆராட்டு நிகழ்வுடன் நிறைவுபெறும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கொடியேறி ஆராட்டு இரு கோயிலில்களிலும் ஒரே நாளில் நடத்தப்படும். திருவனந்தபுரத்தில் பங்குனி திருவிழா கொடியேற்று, ஆராட்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. பின்னர் தேவபிரசன்னம் பார்த்து பத்மநாபசுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கு கொடியேறி விட்டது. அங்கு அரண்மனையில் இருந்தும், கோயிலில் இருந்தும் இது தொடர்பான சார்த்து (கடிதம்) வழக்கம்போல் திருவட்டார் கோயிலுக்கு வரும். அதன்படி இங்கும் விழா ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதுபோன்ற சார்த்து இங்கு வந்து மூன்று நாளாகியும் திருவிழா கொடியேற்று, ஆராட்டு நடத்த எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இது பக்தர்களை மன வேதனையடைய செய்துள்ளது. இது தொடர்பாக மன்னர் குடும்பத்தினரும் வேதனை தெரிவித்துள்ளனர். பக்தர்கள் இது தொடர்பாக போராட்டம் நடத்த ஆலோசித்து வருகின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வழக்கத்தில் உள்ள அதே நடைமுறையை இங்கு செயல்படுத்தாத அறநிலையத்துறையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும்  கண்டிக்கிறோம். கொரோனா காரணமாக அங்கு சங்குமுகத்தில் ஆராட்டு நடைபெறும் என்பது மாற்றப்பட்டு கோயில் அருகே உள்ள பத்மதீர்த்த குளத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இங்கும் அருகே ஆறு ஓடுகிறது, அங்கு ஆராட்டு நடத்தலாம். வழக்கமாக மூவாற்றுமுகத்தில் ஆராட்டு நடைபெறும். அது 4 கி.மீ தூரத்தில் உள்ளது, அதனை தவிர்க்கலாம். ஆனால் திருவிழா நடத்தப்படாதது ஆகம விதிமுறைகளுக்கு மாறாக அமைந்துள்ளது. சார்த்துப்படி திருவிழா நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். பத்மநாபசுவாமி கோயிலில் ஆராட்டு நடைபெறும் வேளையில் இங்கும் ஆராட்டு நடைபெறாவிட்டால் அன்று பக்தர்கள் போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>