×

10 ஆண்டுகளாக அதிகாரிகள் பாராமுகம்: குற்றாலத்தில் பராமரிப்பின்றி பாழாகும் பேரூராட்சி விடுதிகள்

தென்காசி: குற்றாலத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான ரூ. பல கோடி மதிப்பிலான விடுதிகள் முறையான பராமரிப்பின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாழாகி வருகிறது. தென்காசி கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் சுற்றுலா பயணிகள் உள்ளனர். இயற்கை கொஞ்சி விளையாடும் குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து இங்குள்ள அருவிகளில் நீராடிச் செல்வது வழக்கம். இவர்களில் நடுத்தர வர்த்தகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் நலன்கருதி குற்றாலம் பேரூராட்சி சார்பில் பல்வேறு விடுதிகள் கட்டப்பட்டன.

தென்காசி சாலை தங்கும் விடுதி, தென்காசி சாலை தங்கும் குடில்கள், செங்கோட்டை சாலை தங்கும் விடுதி, கூட்ட அரங்குகள், ரோஜா விடுதி, மல்லிகை விடுதி, மெயின் அருவி குடில்கள், அருவி இல்லம் உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் தென்காசி சாலை தங்கும் விடுதியில் 21 அறைகளும், 14 குடில்களும், செங்கோட்டை சாலை தங்கும் விடுதியில் 38 அறைகளும் 4 கூட்ட அரங்குகளும், ரோஜா விடுதியில் 24 அறைகளும், மல்லிகை விடுதியில் 20 அறைகளும், மெயின் அருவி தங்கும் விடுதிகளில் 38 குடில்களும் உள்ளன. இருப்பினும் முறையான பராமரிப்பின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான விடுதிகள் பாழாகி விட்டன. குறிப்பாக விடுதிகள் அருவி இல்லம், மல்லிகை விடுதி உள்ளிட்டவை பாழடைந்து பயன்பாடற்ற நிலைக்கு மாறியுள்ளன.

இதேபோல் தென்காசி சாலை தங்கும் விடுதியும் கிட்டத்தட்ட பாழடைந்து விட்டது. 14 குடில்களில் மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 குடில்கள் தவிர எஞ்சிய அனைத்தும் பாழடைந்துள்ளன. ரோஜா விடுதியில் உள்ள 24 அறைகளில் 12 அறைகள் ஓரளவுக்கு பயன்படுத்தும் நிலையில் இருந்தபோதும் அங்குள்ள மரப்பொருட்கள் மிகவும் சேதமடைந்துள்ளன.

மெயினருவியில் உள்ள 38 குடில்களில் 18 குடில்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. செங்கோட்டை சாலை தங்கும் விடுதியின் கூட்ட அரங்குகள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்ட போதும் ரூ.5 லட்சம் மட்டுமே பேரூராட்சிக்கு வருவாய் ஆக கிடைக்கிறது. மெயின் அருவி தங்கும் விடுதிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கிறது. 17 அறைகள் மட்டுமே உள்ள தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு ரூ.30 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட அறைகளை உடைய பேரூராட்சி தங்கும் விடுதிகளின் மூலம் ரூ. 6 லட்சம் மட்டுமே வருவாய் கிடைப்பது வேதனைக்குரியது.

விடுதிகள் அனைத்தும் பராமரிப்பின்றி பாழான நிலையில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் எனக்கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வைத்து ஆய்வு நடத்திசென்ற பேரூராட்சிகளுக்கான இயக்குநர் மகரபூஷணம், சீரமைப்புக்கு தேவையான நிதி ஒதுக்குவதாகக் கூறி சென்றார். அதன்பேரில் விடுதிகளை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 3 முறை அனுப்பிவைக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுவிஷயத்தில் தென்காசி கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

Tags : hostels ,courthouse , Tenkasi, Kutralam
× RELATED சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு