×

எட்டயபுரம் அருகே கிராம மக்கள் போராட்டம்: சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே பொதுமக்கள் புகாரை தொடர்ந்து அதிகாரிகள் சாலைப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி விலக்கில் இருந்து டி.சண்முகாபுரம் வரையிலான 5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை வடக்கு செமப்புதூர், தெற்கு செமப்புதூர், அஞ்சுரான்பட்டி கிராமங்கள் வழியாக செல்கிறது. சாலை புதுப்பிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பழைய சாலையில் உள்ள கற்கள் பெயர்க்கப்பட்டு புதிய ஜல்லிக்கற்கள் பரப்பும் பணி நடந்து வரும் நிலையில் ஒப்பந்த விதிமுறைப்படி சாலை அமைக்கப்படவில்லை என்று கூறி நேற்று முன்தினம் அவ்வழியாக சாலைப்பணிக்காக கிரசர் பொடி ஏற்றி வந்த லாரியை தெற்கு செமப்புதூர் கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும் முறைகேடாக அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பார்வையிட வேண்டும், ஒப்பந்த விதிகளின்படி சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று படத்துடன் வெளியானது.

இதையடுத்து கோவில்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராஜூ, உதவி பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் சாலை பணியை ஆய்வு செய்தனர். டி.சண்முகாபுரத்திலிருந்து பல்வேறு இடங்களில் ஜல்லிக்கற்கள் ஒப்பந்தப்படி 15 செமீ கனத்தில் போடப்பட்டுள்ளதா? என நெடுஞ்சாலை ஊழியர்கள் துணையோடு அளந்து பார்த்தனர். அப்போது 18 செ.மீ கனத்தில் ஜல்லி மற்றும் கிரசர் பொடி போடப்பட்டிருந்தது. மேலும் சாலையின் அகலம் 12 அடி என இருந்தது.

இதுகுறித்து உதவி பொறியாளர் விக்னேஷ் கூறுகையில், ‘ரூ.2கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கசவன்குன்று- வாலம்பட்டி வரையிலான நெடுஞ்சாலைத்துறை சாலையில் தற்போது 5 கிலோ மீட்டர் தூரம் சாலையை உறுதிப்படுத்தும் பணி நடைபெறுகிறது.  பணி ஆரம்ப கட்டத்தில் உள்ளது. டி.சண்முகாபுரத்திலிருந்து சாலை பணி துவங்கி நடக்கிறது. தெற்குசெமப்புதூர் பகுதியில் சாலை பணி முழுமையாக நடைபெறவில்லை, அதனை தவறாக புரிந்து கொண்ட கிராம மக்கள் ஜல்லிக்கற்கள் கனம் குறைவாக போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது ஆய்வு நடந்துள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் பரப்பியது வரை 18 செ.மீ கனத்தில் உள்ளது. இதில் தண்ணீர் விடப்பட்டு ரோலர் மூலம் அழுத்தம் கொடுக்கும்போது 15 செ.மீ கனம் வரும். மேலும் பணி நிறைவேறும் வரை பார்வையிட்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Ettayapuram , Ettayapuram, villagers, struggle
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...