×

5 மாத வாடகையை யார் செலுத்துவது? விரைவு பேருந்து டிக்கெட் முன்பதிவு மையம் மூடல்

நாமக்கல்: நாமக்கல்லில் 5 மாத வாடகையை யார் செலுத்துவது என்ற பிரச்னையால், அரசு விரைவு பேருந்து டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல் பேருந்து நிலையத்தில், நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம் செயல்பட்டு வந்தது. நாமக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனம், போக்குவரத்து கழகத்தில் அனுமதி பெற்று இதை பல ஆண்டாக நடத்தி வந்தது. டிக்கெட் விற்பனையில் குறிப்பிட்ட சதவீத கமிஷன், தனியார் ஏஜென்சிக்கு விரைவு போக்குவரத்து கழகம் கொடுத்து வந்தது. நாமக்கல்லில் இருந்து சென்னை, திருப்பதி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு, இந்த மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், கடந்த 5 மாதமாக விரைவு பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படவில்லை. தளர்வுகள் காரணமாக, கடந்த 7ம் தேதி முதல் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், நாமக்கல்லில் செயல்பட்டு வந்த முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டு விட்டது. கடந்த 5 மாத வாடகை மற்றும் மின்கட்டணம் ₹28 ஆயிரம் வரை வந்துள்ளது. இந்த பணத்தை யார் செலுத்துவது என்ற பிரச்னையால் மையம் மூடப்பட்டு விட்டது. போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் நிறுவனத்திடம் வாடகை மற்றும் மின்கட்டணத்தை செலுத்தும்படி கூற, அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் மையம் பூட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாமக்கல்லில் இருந்து திருப்பதி, சென்னை, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், தினமும் சேலத்தில் இருந்து இரவு 10 மணிக்கு நாமக்கல் வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்குக்கு சில வாரங்களுக்கு முன்பே, சேலம்- திருநெல்வேலி விரைவு பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் இயக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நெல்லைக்கு விரைவு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு மைய பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : bus ticket booking center closure , Namakkal, express bus, ticket booking
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...