×

கட்டாய திருமணத்தால் வீட்டைவிட்டு வெளியேறி, ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த சிங்கப்பெண்!!

லக்னோ : திருமணம் செய்ய வற்புறுத்தியதால் படிப்புக்காக வீட்டை வெளியேறிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மீரட்டில் வசித்த சஞ்சு ராணி வர்மா என்ற பெண் கடந்த 2013ம் ஆண்டு முதுகலைப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது தாயார் இறந்துவிட்டார். இதனால் சஞ்சு ராணியின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். படிப்பை தொடர திட்டமிட்ட அவர், வீட்டை விட்டு வெளியேறி டெல்லியில் குடியேறியுள்ளார். படிப்பதற்கு பணமும், குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாத சஞ்சுராணி பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதன்மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது பட்டப்படிப்பை முடித்தார்.

பின்னர், தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியராக வேலைப் பார்த்து சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.2018-ல் உத்தர பிரதேச அரசுப் பணித் தேர்வாணையத் தேர்வும் எழுதினார். அதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. இதில், தனது விடா முயற்சியால் 7 ஆண்டுகளுக்கு பிறகு சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளார். வணிக வரி அதிகாரியாக உத்தர பிரதேசத்தில் அவர் பதவியேற்கவுள்ளார். எனினும், தன் கனவுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை; தான் சாதிக்க வேண்டியது இனிதான் அதிகம் இருக்கின்றன என்கிறார் சஞ்சு. ஆம்! அடுத்தது மாவட்ட ஆட்சியர் ஆவதற்காக சஞ்சு ராணி முயன்றுகொண்டிருக்கிறார். 


Tags : Singaporean ,home , Marriage, Civil Service Examination, Success, Lioness
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு