உலகிலேயே 2வது நாடாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அரை கோடி தாண்டியது: அதிகபட்சமாக ஒரே நாளில் 1,290 பேர் பலி

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 50லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு 50 லட்சம் இலக்கை தாண்டிய முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரம் குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் கட்டுக்கடங்காமல் உள்ளது. கடந்த 10 நாட்களாக தினசரி பாதிப்பு 90 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதன் மூலம், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு அரை கோடி, அதாவது 50 லட்சத்தை தாண்டி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் புதிதாக 90,123பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 50 லட்சத்து 20,359ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்து 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 82,066 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 39லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 78.52 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 83,000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பதிவாகி உள்ளது. கடந்த 230 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. அதோடு உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு அரை கோடி பாதிப்பை எட்டிய ஒரே நாடு இந்தியா தான். கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 66.09 லட்சத்துடன் உள்ளது. இந்தியா அடுத்த 15 நாட்களில் அமெரிக்காவையும் முந்தி உலகிலேயே மோசமான பாதிப்பை சந்தித்த நம்பர்-1 நாடாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

படிப்படியாக சரிந்த நாள் கணக்கு

* இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக 21 நாட்கள் ஆகி உள்ளது.

* பின் 16 நாளில் 30 லட்சத்தை எட்டியது.

* அடுத்த 13 நாளில் 40 லட்சத்தை கடந்து விட்டது.

* தற்போது 11 நாளில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்துள்ளது.

* இப்பவும் கடவுள் மீது பழி போடுவீங்களா?

கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில், ‘‘கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான மகாபாரதம் தொடங்கி விட்டது, ஆனால் மோடி அரசைத் தான் காணவில்லை. உலகிலேயே கொரோனா வைரசின் ஒருநாள் பாதிப்பில் இந்தியா நம்பர்-1 (90,123 பேர்). ஒருநாள் பலியில் நம்பர்-1 (1,290), இரட்டிப்பாகும் காலகட்டத்தில் நம்பர்-1 (31 நாள்), மொத்த பாதிப்பில் நம்பர்-2. இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் தர வேண்டும். இந்த அரசு எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தப் போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இப்பவும் அவர்கள் பொறுப்பேற்பார்களா அல்லது கடவுள் மீது பழியை போடுவார்களா?’’ என கேட்டுள்ளார். சமீபத்தில், பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது கடவுளின் செயல் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* மீண்டும் பரிசோதனை சீரம் நிறுவனம் அனுமதி

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் 2, 3ம் கட்ட இறுதி பரிசோதனையை இந்தியாவில் சீரம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவால், உலக அளவில் தற்காலிகமாக சோதனையை ஆக்ஸ்போர்டு நிறுத்தியது. பின் கூடுதல் கண்காணிப்புடன் கடந்த இரு தினங்களுக்கு முன் பரிசோதனையை மீண்டும் தொடங்கியது. முதலில் பரிசோதனை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி இந்தியாவிலும் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தற்போது கூடுதல் கவனத்துடன் மீண்டும் பரிசோதனையை தொடங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தந்துள்ளது.

Related Stories:

>