×

அபே பதவி விலகியதை தொடர்ந்து ஜப்பான் பிரதமராக யோஷிஹிடே தேர்வு

டோக்கியோ: உடல் நல பாதிப்பால் ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். கடந்த 2006ம் ஆண்டு ஜப்பானின் மிக இளம் பிரதமராக பதவியேற்றவர் ஷின்ஷோ அபே. 8 ஆண்டாக பிரதமராக இருந்த இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. ஜப்பானின் நீண்டநாள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் ஷின்சோ அபே பெற்றார். இந்நிலையில் பெருங்குடல் பாதிப்பால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்தார்.

அபேவின் ராஜினாமாவை தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1ம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் யோஷிஹிடே சுகாவைப் பிரதமராகத் தேர்வு செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

யோஷிஹிடே பதவியேற்க ஏதுவாக அபே நேற்று தனது பிரதமர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளது. பதவி விலகிய ஷின்ஷோ அபே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தான் 8 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்ததாக பெருமையுடன் தெரிவித்தார். அபேயின் வலதுகரமாக அவருடன் நெருக்கமாக இருந்தவர் யோஷிஹிடே. ஜப்பானின் அடுத்த பிரதமராகும் இவர், கொரோனா வைரஸ் தாக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்னைகளைக் கையாள வேண்டிய நெருக்கடி உள்ளது. அதேபோல் சீனாவுடனான உறவு, டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றிலும் சுகா எப்படி நடந்துகொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் யோஷிஹிடே.
* ஜப்பானின் வடக்குப் பகுதியான அகிடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாகுபடி செய்து வந்த குடும்பம் அவருடையது.
* அரசியலில் எந்த பின்னணியும் இல்லாமல் உயர்பதவிகளுக்கு வந்தவர்.
* சாமான்ய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாடுபட வேண்டும் என்று முயல்பவர்.
* ஜப்பானுக்கும் வெளிநாடுகளுக்குமிடையேயான உறவைப் பேணுவதில் திறம்பட பணியாற்றியவர் என்று புகழப்படுபவர்.

* மோடி வாழ்த்து
புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நம் இருநாட்டின் தூதரகரீதியான உறவுகள் உங்களின் மூலம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என மோடி டிவிட்டரில் கூறி உள்ளார்.

Tags : Yoshihide ,resignation ,Japan ,Abe , Yoshihide was elected Prime Minister of Japan following Abe's resignation
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...