×

மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை இந்திய-சீன எல்லையில் 6 மாதமாக ஊடுருவல் இல்லை: காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியா, சீனா எல்லையில் கடந்த 6 மாதமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். அங்கு சீன ராணுவம் தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்திய நிலப்பரப்பில் பல இடங்களை அவர்கள் கைப்பற்றியிருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறது. இதை ஒப்புக் கொள்ளும் வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் லடாக்கில் 38,000 சதுர கி.மீ. பரப்பளவில் சீனா சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் சீன எல்லையில் நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் எந்த நிலையையும் எதிர்கொள்ள ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘பாகிஸ்தானால் கடந்த ஏப்ரலில் அதிக அளவில் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 47 முறை பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. ஆனால் சீனாவை பொறுத்தவரை இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதமாக எந்த ஊடுருவலும் இல்லை. கடந்த 3 ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 594 முறை ஊடுருவல் முயற்சி மேற்கொண்டது”என குறிப்பிட்டு இருந்தார். இணை அமைச்சரின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீன எல்லையில் இருந்து தினம் தினம் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தரப்பில் இப்படி ஒரு தகவல் வெளியிட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* திமுக, காங். எதிர்ப்பு வங்கி கட்டுப்பாடு திருத்த மசோதா நிறைவேற்றம்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் வங்கி கட்டுப்பாடு சட்டதிருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கான அவசர சட்டம் கடந்த ஜூன் மாதம் இயற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக, ஆர்எஸ்பி, ஏஐஎம்ஐஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக எம்பி செந்தில்குமார் பேசிய போது, ``கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சர் கூறினார். தமிழகத்தில் 128 கூட்டுறவு வங்கிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவது, மாநிலங்களின் உரிமைகளை நெரிப்பதாகும். ரிசர்வ் வங்கியின் பணிச்சுமையை அதிகரிப்பதாகும்,’’ என்றார். ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேறியது. இந்த சட்டதிருத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு பொருந்தாது.

* நீங்கள் யார் பக்கம்?
ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “ பிரதமர் மோடி யாரும் எல்லையை தாண்டி வரவில்லை என்கிறார். பின்னர் சீன வங்கியிடம் இருந்து மிகப்பெரிய கடனை வாங்குகிறார். பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளாக தெரிவித்தார். தற்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் எந்த ஊடுருவலும் இல்லை என்கிறார். பிரதமர் மோடி அரசானது இந்திய ராணுவ வீரர்களின் பக்கம் உள்ளதா அல்லது சீனாவின் பக்கம் உள்ளதா. மோடி ஜீ எதற்கு மிகவும் பயப்படுகிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Union Minister ,border ,Indo ,Chinese ,Congress , Controversy over Union Minister's response No intrusion on Indo-Chinese border for 6 months: Congress strongly condemns
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...