×

கேரள தங்கம் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் சொப்னாவுடன் மேலும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தலில் கைதான சொப்னாவுடன், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து என்ஐஏ, சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை  விசாரித்த போது, அவர் மறுத்து வந்தார். பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலுடன் தொடர்பு இருப்பது உறுதியானது. இந்த நிலையில் சொப்னா, சரித்குமார், சந்தீப்  நாயர் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்-டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றில் 2,000 ஜிபி அளவில் ரகசிய தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் கைதான மற்றவர்களிடம் இருந்தும் பறிமுதல்  செய்யப்பட்ட 2,000 ஜிபி தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் இருந்து சொப்னா கும்பல் அழித்த தகவல்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் மீட்கப்பட்டன.

இதில் பல முக்கிய விவரங்கள் உள்ளன. கடத்தல் விபரம் வெளியே தெரியவந்து, தான் சிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த தகவல்களை வைத்து முக்கிய பிரமுகர்களை மிரட்ட சொப்னா திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  மேலும் ஒரு கேரள அமைச்சர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுடன் சொப்னாவுக்கு தொடர்பு இருந்தது இந்த டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் தெரியவந்து உள்ளது. ஆகவே அந்த அமைச்சரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அமைச்சர் ஜலீலிடம் கடந்த 11ம் தேதி அமலாக்கத்துறை விசாரித்ததாக தகவல் வெளியானது. அதற்கு முந்தைய நாளும் விசாரணை நடந்ததாக தெரிகிறது. 2 முறை நடந்த விசாரணையிலும் அமைச்சர் ஜலீல் கூறிய தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.

* நெஞ்சுவலி நாடகம் அம்பலம்
எர்ணாகுளம்  சிறையில் இருந்த சொப்னா 2 முறை நெஞ்சுவலி வலிப்பதாக கூறினார். திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 6 நாள் சிகிச்சை பெற்றார். 2 முறையும் பெரிதாக எந்த நோயும்  இல்லை என்று டாக்டர்கள் கூறினர். அப்போது இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் பிரச்னையும் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் நெஞ்சுவலி அதிகம் இருப்பதாக கூறினார். இதையடுத்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது தற்போது நெஞ்சுவலி இல்லை என்று கூறினார். இதேபோல வயிற்று வலி என்று அட்மிட் ஆன ரமீஸுக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. ஆகவே 2 பேரும் நாடகம் ஆடியது தெரியவந்தது. சிறையில் கடும் கெடுபிடிகள் இருந்ததாலும், மருத்துவமனைக்கு சென்றால் வெளியாட்களை தொடர்பு கொள்ளலாம் என்று திட்டமிட்டு 2 பேரும் நாடகமாடி உள்ளனர்.

Tags : Kerala ,minister , Kerala Gold Smuggling Case Viswaroopam Sopna Contacting Another Minister
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...