×

பெங்களூரு சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக அபராத தொகை செலுத்தும் முயற்சியில் சசிகலா தீவிரம்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அபராத தொகை செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மறைந்த தமிழக முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் அடுத்தாண்டு முடிகிறது. சசிகலா வரும் 2021 ஜனவரி 27ம் தேதி  விடுதலையாக வாய்ப்புள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் நீதிமன்றம் குற்றவாளிகள் தலா ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள ரூ.10 கோடி அபராத தொகையை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். இது தொடர்பாக குற்றவாளிகளின் தரப்பு வக்கீல்கள், அபராதம் செலுத்துவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து நீதிமன்றம் வந்து தகவல் பெற்று சென்றுள்ளதாக தெரியவருகிறது. குற்றவாளி சுதாகரன் சார்பில் கட்ட வேண்டிய ரூ.10 கோடி அபராத தொகையை வங்கி வரையோலையாக எடுத்து  நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சுதாகரன் தரப்பு வக்கீல்கள் உறுதி செய்யாமல் மழுப்புகிறார்கள். இளவரசி தரப்பில் செலுத்த வேண்டிய அபராத தொகை தொடர்பாக வக்கீல் அசோகன் மற்றும் முன்னாள் அதிமுக எம்பி ஒருவர் நேரில் வந்து தகவல் பெற்று சென்றுள்ளதாக நீதிமன்ற வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

இதனிடையில் சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகை செலுத்துவது தொடர்பாக பெங்களூருவில் உள்ள வக்கீல் ஒருவர் மூலம் தனிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக அவர் தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியிடம் கேட்டபோது, சசிகலா தரப்பில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் இதுவரை எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. மனுதாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகையை செலுத்துவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Tags : Sasikala ,jail ,Bangalore ,release , asikala is serious about trying to pay the fine soon after his release from the Bangalore jail
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!