×

ஓணகாந்தேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்பட ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதையொட்டி, காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை ஓணகாந்தேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் சுமார் 250 சதுர அடி இடத்தில் அத்துமீறி கொட்டகை அமைத்து, அதில் கழிப்பறை மற்றும் குளியலறை கட்டி பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தியாகராஜன், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் சரக ஆய்வர் சுரேஷ் உள்பட கோயில் ஊழியர்கள், நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கோயில் இடத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஊழியர்கள் கோயில் இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
பின்னர், அங்கு அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள், மீண்டும் இந்த இடத்தை ஆக்கிரமிக்க நினைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.


Tags : Recovery ,land ,Onakandeswarar , Recovery of Rs. 50 lakh occupied land belonging to Onakandeswarar temple
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!