×

திருப்போரூரில் கைப்பற்றப்பட்ட 4 வெடி குண்டுகள் செயலிழப்பு

திருப்போரூர்: திருப்போரூரில் வீசப்பட்ட வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த 4 வெடிகுண்டுகளையும் செயலிழக்க செய்தனர். திருப்போரூர் பஸ் நிலையம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி இரவு பைக்கில் சென்ற 2 பேர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் செங்கல்பட்டை சேர்ந்த அசோக்குமார் (30), விக்கி (எ) வினோத்குமார் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, திருப்போரூர் போலீசார் நடத்திய விசாரணையில், அசோக்குமார் தங்கிய கேளம்பாக்கம் ஜோதி நகர் வீட்டில் 4 வெடிகுண்டுகள் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீசார் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

பின்னர், கடந்த 1ம் தேதி, ஜோதி நகரில் உள்ள அசோக்குமாரின் வீட்டுக்கு, அவரை அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கையெறி குண்டுகளை கைப்பற்றி, மண் நிரப்பிய வாளியில் பத்திரமாக எடுத்து சென்றனர். இந்த 4 வெடிகுண்டுகளும் கீரப்பாக்கம் கல் குவாரியில் பாதுகாக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யவேண்டும் என அனுமதி கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திருப்போரூர் போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, வெடிகுண்டுகளை பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்ய உத்தரவிட்டார். அதன்படி, வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜா முன்னிலையில், கீரப்பாக்கம் கல் குவாரியில் வைத்திருந்த 4 வெடிகுண்டுகளும் செயலிழக்க செய்யப்பட்டன.

Tags : Thiruporur , 4 bombs seized in Thiruporur defused
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...