×

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு விவகாரம் கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு மறுப்பு: தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் கலந்தாய்வை நடத்தி முடிக்க கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தை தொடர்ந்து, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து சில மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம். இதில் ஆகஸ்ட் 31க்குள் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

அதனால் இதுதொடர்பாக காலக்கெடு நீட்டிப்பு வேண்டுமென்றால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’’ என கடந்த 2ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட அனுமதியை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை ஆகஸ்ட் 31க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னதாக தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது சூழல் சரியான முறையில் இல்லாததால் மருத்துவ மேற்படிப்பின் கலந்தாய்வை நடத்தி முடிக்க மேலும் 15 நாட்கள் கூடுதலாக அவகாசம் வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கைக்கு ஒரு நாளுக்குள் பதிலளிக்க வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு தொடர்பான விவகாரத்தில் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் அதுகுறித்த பதில் பிரமாணப்பத்திரமாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடத்தும் விவகாரத்தில் அனைத்துக் கட்ட பணிகளும் முடிவடைந்து விட்டது. இதில் தமிழகத்திற்கு மட்டும் தனியாக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுத்தால் மற்ற மாநிலத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர நேரிடும். அவ்வாறு அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றியமைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் என்பது கிடையாது’’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமண், நவீன் சின்கா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், “மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடத்தும் விவகாரத்தில் மத்திய அரசின் பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு என கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்க முடியாது’’ என தெரிவித்து, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Govt ,Tamil Nadu ,government ,Supreme Court , Govt refuses to grant extra leave in medical superannuation case: Tamil Nadu government's petition dismissed by Supreme Court
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...