×

வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்தம்

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும்  குறைந்தபட்ச ஏழு ஆண்டு சிறை தண்டனையை, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்  தண்டனையாக வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து, உடனடியாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கத்திற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  எதிரான குற்றங்களை விசாரிக்கும் கண்காணிப்புப் பிரிவு, சிறப்பு சிறார்  காவல் பிரிவு, வரதட்சணை தடுப்புப் பிரிவு, குழந்தை கடத்தல் தடுப்புப்  பிரிவு ஆகிய அலகுகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னை  பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 35 அனைத்து காவல் நிலையங்களுக்கும் நவீன  வசதிகள் பொருத்திய ஊர்திகள், நிர்பயா நிதியின் கீழ் வழங்கப்பட்ட அம்மா  ரோந்து வாகனம் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றின்  வாயிலாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றச் செயல்கள்  தடுக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும்  குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு பிரசாரமும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர்கள் தடுப்புச்  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி,  பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக காவலன்  செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவையும்  சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குற்றங்கள் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்வதற்கு 1860ம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று  கீழ்க்கண்ட சட்டத் திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்.

1)  பிரிவு 304(பி)யில் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும்  குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள்  தண்டனையாக
வழங்குதல்,
2) பிரிவு 354(பி)யில் குற்ற நோக்கத்துடன்  (பெண்களின் ஆடைகளை களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும்  குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் ஐந்து  ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக வழங்கப்படும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை  கடுமையாக்கி பத்தாண்டுகளாகவும் வழங்குதல்.
3) பிரிவு 354(டி)யில் தவறான  குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால், இரண்டாம் முறையும்,  தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டுகள் வரையான  சிறை தண்டனையை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக்கவும்,
4) பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் பாலியல் தொழிலுக்காக 18  வயதுக்குட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல், தற்போது வழங்கப்படும்  அதிகபட்சமான பத்தாண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கு பதிலாக, குறைந்தபட்சம்  7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்தில், பிரிவு 354(டி)யில் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால், இரண்டாம் முறையும், தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டு வரையான சிறை தண்டனையை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக்கவும் மத்தியஅரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஓராண்டில் 55 பெண்கள் பலி
தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு 55 பெண்கள் வரதட்சணை கொடுமையால் மரணமடைந்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 2017ம் ஆண்டு 48 பெண்கள் வரதட்சணை கொடுமையால் மரணமடைந்துள்ளனர்.



Tags : deaths ,women ,crimes , 10 years imprisonment for dowry related deaths: Amendment to prevent crimes against women
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...