×

வேதா நிலையத்தை நிர்வகிக்க ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை: சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த இடமான வேதா நிலையத்தை தமிழக மக்களுக்கு அவர் செய்த சாதனைகளை மற்றும் தியாகங்களை நினைவு கூறும் விதத்தில் நினைவிடமாக மாற்றப்பப்படுமென முதல்வர்  எடப்பாடி கடந்த 2017 ஆகஸ்ட் 17ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்க 2013 நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையாக நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தச் சட்டத்தின் கீழ் போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்காக கடந்த 2017 அக்டோபர் 5ம் தேதி அரசாணை நிர்வாக ஒப்பளிக்கப்பட்டது மற்றும் கூறப்பட்ட சட்டத்தின் கீழ் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அறைகலன்கள், புத்தகங்கள், அணிகலன்கள் போன்ற அத்தகைய அசையும் பொருட்கள் உள்ளடங்கிய வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டிடம் 3 ஆண்டுகளுக்கும் அதிகமான பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், அவற்றை தக்கவாறு பேணுகையின்மையினால் அழிவதில் மற்றும் கெடுவதில் இருந்து தடுத்தல் உடனடி தேவையானது. இதனால், அங்குள்ள அசையும் பொருட்களுடன் சேர்த்து வேதா நிலையத்தை அதன் பராமரிப்பு மற்றும் பேணுகைக்காக நில கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் தக்கவாறு நிறைவு செய்யப்பட்டு மற்றும் மத்திய சட்டம் 2013ன் கீழ் அரசினால் உடமை எடுக்கப்படும் வரை அரசுக்கு தற்காலிகமாக மாற்றம் செய்ய மற்றும் அதனை ஒரு நினைவு இல்லமாக மாற்றுவதற்காக நீண்ட கால ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு நினைவிடத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்கு செயல்வடிவம் கொடுக்க அவசர சட்டம் ஒன்றை பிரகடனம் செய்வது தேவையானதாக இருந்தது. அதன்பேரில் தமிழ்நாடு ஆளுநரால் 2020 தமிழ்நாடு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அவசர  சட்டமானது. இந்த அறக்கட்டளையானது அசையும், அசையா சொத்துக்களாகிய இரண்டையும் வைத்ததிருப்பதற்கு அதிகாரத்துடன் ஒரு கூட்டுக்குழுமமாக இருத்தல் வேண்டும். அந்த அறக்கட்டளை தலைவர் (முதல்வர்), துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பரம் அமைச்சர், அரசு தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை கட்டுமான தலைமை பொறியாளர், அருங்காட்சியகத்தின் உறுப்பினர், ஜெயலலிதா தலைமையேற்றிருந்த அரசியல் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இருந்து அக்கட்சியுடன் ஆலோசனை செய்து அரசால் நியமிக்கப்படக்கூடிய உறுப்பினர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனர் உறுப்பினர் செயலாளர்.

இந்த அறக்கட்டளையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளும் ஆகும் மற்றும் அவர்கள் மறு நியமனத்திற்கு தகுதியுடையவரால் இருத்தல் வேண்டும். இந்த அறக்கட்டளையானது அசையா சொத்துக்களை நல்ல நிலையில் நிர்வகிக்க மற்றும் தேவைப்படும் போதெல்லாம் பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். நினைவிட சொத்தினை உரிமை மாற்றம் செய்யும் போது சொத்தினை உரிமை மாற்றத்தின் மற்றும் செயல் திட்டத்தின் ஒப்புதலுக்காகவும் தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அறக்கட்டளையானது நன்கொடைகள் பெறவும் மற்றும் நபர் எவரிடம் இருந்து மானியங்கள் பெறவும் உரிமையுடையதாகும் மற்றும் அது தக்கதென கருதும் முறையில் நிதியை திரட்டுவதற்கு உரிமையுடையதாகும்.

அறக்கட்டளை தலைவரின்கீழ்  அல்லது தலைவரால் அவருக்கு ஒப்படைக்கப்படலாகும் கடமையை நிறைவேற்றுவதற்கு, அத்தகைய அதிகாரங்களை செலுத்துவதற்கும் அரசு இணை செயலாளர் பதவிக்கு குறையாத அலுவலர் ஒருவரை அறக்கட்டளை செயலாளராக நியமிக்கலாம்.
அறக்கட்டளை அலுவல்களை நிர்வகிக்கும் நோக்கத்திற்காக அறக்கட்டளையானது, கூட்டம் ஒன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நிர்வாகக்குழுவை நியமித்து அத்தகை தீர்மானத்தில் அதிகாரங்கள், கடமைகள், செயல்பணிகளை அவற்றிற்கு ஒப்படைக்கலாம்.

அறக்கட்டளை தீர்மானத்தின் மூலம் எந்தவொரு நபரையும், அத்தகைய நபர் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நிர்வாக குழுவின் உறுப்பினராக நியமிக்கலாம் மற்றும் அவ்வபோது இந்த பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்தையும் வேறுப்படுத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.


Tags : Jayalalithaa Memorial Trust ,Vedha Center ,Bill , Jayalalithaa Memorial Foundation to manage Vedha Center: Bill passed unanimously
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு