×

குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு 2வது நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு ஐகோர்ட் விரைவில் விசாரணை

சென்னை: 2013ல்  குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடைசெய்யப்பட்டன. ஆனால் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21  திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டப்பேரவைக்குள்  கடந்த 2017ம் ஆண்டு குட்கா பொட்டலங்களை கொண்டு சென்றனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை உரிமை குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது. அதை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.,க்கள் 2017ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி  அமர்வு விசாரித்து ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தது.

அதில், 2017ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படை தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.  பேரவை உரிமைக்குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் அவர்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு  செப்டம்பர் 7ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது.
அதன் முடிவின்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு  புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு,  சட்டப்பேரவை தொடங்கும் நாளான 14ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த புதிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களை பங்கேற்க விடாமல் தடுக்கப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாக கையாண்ட விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்புவதை தடுக்கும் வகையில்  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரிக்க கோரி திமுக சார்பில் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த வழக்கை விரைவில் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்தார்.

Tags : DMK ,rights committee ,tribunal ,Gudka , The DMK's ongoing case against the 2nd notice of the rights group in the Gudka case will be heard by the tribunal soon
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...