×

10 கோடி ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவிடம் விற்க ஒப்பந்தம்

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துக்கு விற்க ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டியிட்டு வருகின்றன. ரஷ்யாவின் கமெலியா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம், ரஷ்ய நேரடி நிதி முதலீடு (ஆர்டிஐஎப்) இணைந்து, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக ஆகஸ்ட் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது.

இதனிடையே, ஸ்புட்னிக்-வி.யின் முதல் தொகுப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை கடந்த 8ம் தேதி அறிவித்தது. இம்மாத தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறித்து இந்திய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய நேரடி நிதி முதலீடு (ஆர்டிஐஎப்) தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆர்டிஐஎப் தலைமை அதிகாரி கிரில் டிமிட்ரிவ் அளித்த இ-மெயில் பேட்டியில், இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துக்கு 10 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசி விற்க ரஷ்ய நேரடி நிதி முதலீடு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இவை இந்தியாவில் பரிசோதனை மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இது தவிர, இந்தியா, பிரேசில், சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளில் ஸ்புட்னிக்-வி குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறினார்.

Tags : Russian ,India , Agreement to sell 10 crore Russian vaccines to India
× RELATED ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த...