×

தமிழகத்தில் ஆன்லைன் கல்வியில் அடுத்தடுத்து சிக்கல்: கூடுதல் டேட்டா செலவு, நெட் கோளாறால் திண்டாடும் ஆசிரியர்கள், மாணவர்கள்

நெல்லை: தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் தினமும் ஏற்படும் டேட்டா செலவு, நெட் கிடைக்காமல் துண்டிப்பு போன்ற பிரச்னைகளால் வகுப்பு தொடர்பு கிடைக்காமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்தரை மாதங்களாக கல்வி நிறுவனங்கள் நேரடியாக செயல்படவில்லை. இதனால் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் ஆன்லைன் மூலம் பாடம் கற்றுத் தரப்படுகிறது. தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தினமும் 5 மணி நேரத்திற்கு குறையாமல் பாடம் கற்றுத் தரப்படுகிறது.

இதனால் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் முன்னால் இணைப்பை துண்டிக்காமல் மாணவர்களும், ஆசிரியர்களும் அமர்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் வெவ்வேறு மாணவர்களை பாட வாரியாக சந்திக்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே கற்றுத் தருவதால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு புதிய இணைப்பு முகவரி தரப்பட்டு அதில் இணையும் நிலை உள்ளது. இதில் எல்லாம் பெரிய சிக்கல் ஏற்படுவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக இணைப்பு தடையின்றி கிடைத்து பாடம் படிப்பதும், கற்றுத்தருவதும் பெரும் சவாலாக மாறிவிட்டது.

பெரும்பாலான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொடர்ச்சியாக இணைப்பு கிடைப்பதில்லை. பாடம் நடந்து கொண்டிருக்கையிலேயே திடீரென வேகம் குறைவது அல்லது இணைப்பு துண்டிப்பது, தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்வது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தொடர்ச்சியாக இணையதளத்தில் இருக்கும் போது முக்கிய பாடம் நடத்தும் போது இணையதள இணைப்பு திடீரென கட் ஆகிவிடுகிறது. இதனால் தொடர்ச்சியாக கவனித்து பாடம் கற்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதுபோல் வருகை பதிவு செய்யும் நேரத்தில் இணைப்பு கட் ஆனால் அன்றைய தினம் வகுப்பை கவனித்தும் ஆப்சென்ட் ஆகும் நிலை உள்ளது.

தினமும் அதிக டேட்டா ஜிபி செலவாகிறது என்றனர். இதுகுறித்து சில ஆசிரியர்கள் கூறுகையில், இணையதளம் மூலம் பாடம் எடுப்பதில் மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகள், ஆசிரியர்களுக்கும் உள்ளன. எங்களுக்கே தினமும் 7 ஜிபிக்கு மேல் செலவாகிறது. பல ஏழை, நடுத்தர மாணவர்களின் பெற்றோர் கஷ்டபட்டு செல்போன் அல்லது லேப்டாப்பை கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். இப்போது அவர்கள் தினமும் நெட் டேட்டா கார்டு போடுவதிலும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு போட்டாலும் சில நேரங்களில் நெட் சேவை பிரச்னையில் தடங்கல் ஏற்படும் போது சிக்கல் நிலவுகிறது.

மலைப்பகுதி மற்றும் நெட் தொடர்பு குறைவாக உள்ள கிராமப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நேரில் கற்றுத் தருவது போன்ற நிலை இதில் இல்லை. எப்போது வகுப்புகள் தொடங்குமோ அப்போது தான் இதற்கு முழு தீர்வு கிடைக்கும் என்றனர்.

Tags : Tamil Nadu ,teachers , Successive problems in online education in Tamil Nadu: cost of additional data, teachers and students suffering from NET disorder
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா