×

8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’

புதுடெல்லி: கொரோனாவால் இறந்த பாட்டியின் இறுதிச் சடங்கிற்கு செல்லாமல், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள செவிலியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ராக்கி ஜான் என்ற செவிலியர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நிலையில், அவரது பாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கேரளாவில் இறந்தார். ஆனால், ராக்கி ஜான் தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தும், டெல்லி எய்ம்சில் கொரோனா வார்டில் தொடர்ந்து மன உறுதியுடன் நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார். இவரை, மருத்துவர்களும், சக செவிலியர்களும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து செவிலியர ராக்கி ஜான் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்று பாதித்து இந்த உலகத்தை விட்டு சென்ற எனது பாட்டியை கடைசியாகக் கூட நான் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. ஒருபுறம், எனது பாட்டி கேரளாவில் தனது இறுதி மூச்சை விடுகிறார். மறுபுறம் நான் எய்ம்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறேன். இவர்களை காப்பாற்றுவதே எனது முக்கிய பணியாக கருதுகிறேன். நான் என்னுடைய பாட்டியுடன் கடைசியாக உரையாடியது, அவர் ஐசியுவில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் தான். அதன் பின் அவரிடம் பேசமுடியவில்லை. 78 வயதான எனது பாட்டிைய ‘அம்மா’ என்றுதான் அழைப்பேன். அவரது மறைவு நாளில் நான் மிகவும் சோகமாக இருந்தேன். அவர் என்னை ஒரு குழந்தையைப் போல வளர்த்தார். எனது தாய் எனக்கு 8 வயதாக இருக்கும் போது, ரத்த புற்றுநோயால் இறந்தார். அதன்பிறகு, எனது கல்வி, வளர்ப்பு ஆகிய எல்லாவற்றையும் எனது பாட்டிதான் கவனித்துக்கொண்டார். அதனால், அவர் எனது அம்மா. இந்த கொரோனா நோய், தனது அன்புக்குரியவர்களை கடைசியாகப் பார்க்க கூட அனுமதிப்பதில்லை. கேரளாவில் பாட்டியின் இறுதி சடங்கை விட, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிகமான நோயாளிகளின் வாழ்வே பெரிதாக எனக்கு தெரிந்தது. என் வார்டில் உள்ள கொரோனா நோயாளிகளைப் பார்க்கும்போது, ​​நான் அம்மாவைப் (பாட்டி) பற்றி நினைக்கிறேன். இங்குள்ள ஊழியர்கள் பலர் என்னைப் போன்ற சூழ்நிலையில் உள்ளனர். சுகாதார பணியாளர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால், மக்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? மருத்துவர்கள், செவிலியர்கள் என்று எங்களில் பலர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் துப்புரவுப் பணியாளர்கள் முதல் பாதுகாப்புக் காவலர்கள் வரை அனைவரும் எங்களுக்கு உதவுவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்….

The post 8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’ appeared first on Dinakaran.

Tags : Delhi ,AIIMS ,New Delhi ,Kerala ,Delhi AIIMS ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி...