×

நாகை ராஜகோபாலசாமி கோயிலின் 3 சுவாமி சிலைகள் லண்டனில் மீட்பு: விரைவில் தமிழகம் வந்துசேரும்

லண்டன்: நாகை ராஜகோபாலசாமி கோயிலின் 3 சுவாமி சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டன. அவை விரைவில் தமிழகம் வந்துசேரும் என்று அதிகாரிகள் ெதரிவித்தனர். தமிழகத்தில் இருந்து 1978ம் ஆண்டுவாக்கில் ராமர், சீதா மற்றும் லட்சுமணர் சுவாமி சிலைகள் லண்டனுக்கு கடத்தப்பட்டன. இந்த சிலையை வாங்கியவர், தற்போது அந்த சிலைகளை இந்திய அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இந்த சிலைகளின் வரலாற்றை அறிந்த பின்னர், சிலைகளை வாங்கிய நபர் தானாக முன்வந்து அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். முன்னதாக இந்த சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் லண்டன் மெட்ரோ காவல்துறை தகவல் கொடுத்தது.

அதன்படி, விசாரணை நடத்தியதில், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பள்ளியில் இந்த சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த சிலைகள் விஜயநகர பேரரசின் காலத்தைச் சேர்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோயிலில் இருந்து திருடப்பட்டுள்ளன. லண்டன் போலீசாரின் உதவியுடன், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பின்னர், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், லண்டனில் உள்ள ஸ்ரீமுருகன் கோயிலில் சிலைகளை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் விழா நடந்தது.

இந்நிகழ்வில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலத் சிங் படேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து லண்டன் பெருநகர காவல்துறையின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் டிம் ரைட் கூறுகையில், ‘சோழர்கால சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் பெருநகர காவல்துறை மகிழ்ச்சி அடைகிறது. இவை அழகாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்ல, அவை மத முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. எனவே, அங்கிருந்து எடுத்து வரப்பட்டதோ,  அதே கோயிலுக்குத் திருப்பித் தரப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.


Tags : Swami ,Nagai Rajagopalasamy ,London ,Tamil Nadu , Nagai Rajagopalaswamy Temple, 3 Sami Statue, Recovered in London
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்