×

பரபரப்பாக நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நிறைவு: முழு ஒத்துழைப்பு அளித்த முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சபாநாயகர் தனபால் நன்றி.!!!

சென்னை: பரபரப்பாக நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதன்முறையாக ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளம்  கூட்ட அரங்கத்தில் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கடந்த 8ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழுவில் முடிவு  செய்யப்பட்டது.

முதல் நாள்:

அதன்படி, முதல் நாள் கூட்டம் கடந்த 14-ம் தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வசந்தகுமார்  எம்பி உள்ளிட்ட மற்றும் 23 உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் 16 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற கூட்டம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2-ம் நாள்:

தொடர்ந்து, இரண்டாம் நாள் நேற்று சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான்  திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட  பிரச்னைகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றது. நீட் விவகாரத்ததால், பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதாக, காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதன்படி, காங்கிரஸ்  உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல்  செய்தார். தொடர்ந்து, மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவை சட்டபேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து, மசோதா சட்டபேரவையில் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது. தொடர்ந்து, அவை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

3-ம் நாள்:


இன்று 3-வது நாள் இன்றுடன் அவை முடிவடையவுள்ளதால், கொரோனா, நீட், பிரதமர் கிசான் திட்டம் முறைகேடு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றது. ஆனால், புதிய  கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில், முக்கியமாக, வரதட்சணைச்கொடுமைக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், பாலியல் தொழிலுக்காக சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு சிறை. பெண்களை பின் தொடர்தல் குற்றத்திற்கு தண்டணை 7 ஆண்டுகளாக அதிகரிப்பு. 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல்  தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, சட்டப்பேரவையில் 2020-21 ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்  செய்தார்.

தொடர்ந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற அறக்கட்டளை அறக்கட்டளை உருவாக்குவற்கான சட்டமுன்வடிவு மசோதா, நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக  பிரிக்கும் சட்டமுன்வடிவு மசோதா, திருமணங்கள் பதிவு செய்தல் மசோதா, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமசோதா உள்ளிட்ட 4 மசோதாக்கள் தாக்கல்  செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, 3 நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை நிறைவடைந்தாக அறிவித்த சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

கொரோனா தொற்று காலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை மாற்று இடத்தில் நடத்த முழு ஒத்துழைப்பு கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்தார்.


Tags : Danapal ,Chief Minister ,Deputy Chief Minister ,Opposition , Speaker Danapal thanked the Chief Minister, Deputy Chief Minister and Leader of the Opposition for their full cooperation.
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு