×

நீட் தேர்வால் 13 பேர் இறந்தது தற்கொலை அல்ல: மத்திய-மாநில அரசுகள் இணைந்து மாணவர்களை கொலை செய்திருக்கிறார்கள்

சென்னை: “தமிழகத்தில் நீட் தேர்வால் 13 பேர் இறந்தது தற்கொலை என்று கூட சொல்ல மாட்டேன். கொலை நடந்துள்ளது. இவர்களை “மத்திய-மாநில அரசுகள் இணைந்து கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முழுக் காரணம்” என்று மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக தலைமை கழகம் சார்பில் “திமுக முப்பெரும் விழா-விருது வழங்கும் விழா” நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு வரவேற்றார். விழாவில் பெரியார் விருதை முன்னாள் மாவட்ட செயலாளர் மா.மீனாட்சி சுந்தரம், அண்ணா விருது-தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் முன்னாள் துணை தலைவரும், முன்னாள் துணை வேந்தருமான முனைவர் அ.இராமசாமி, கலைஞர் விருது- திமுக வர்த்தகர் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா, பாவேந்தர் விருது- முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி, ேபராசிரியர் விருது- கரூர் மாவட்ட திமுக மூத்த முன்னோடி சுப.ராஜகோபால் ஆகியோர் பெற்றனர். அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடையும், மாலையும் அணிவித்தார். மேலும் பாராட்டு கேடயம், பாராட்டு சான்றிதழ், பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்றவர்களை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். நிறைவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முப்பெரும் விழா பேரூரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 9ம் தேதி நடந்த பொதுக்குழுவில் பேசும்போது, நான் குறிப்பிட்டு சொன்னேன். இன்னும் ஏழே மாதத்தில் நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். இது நான் அல்ல, நீங்கள் அல்ல, நாட்டில் இருக்கும் மக்களே தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை நான் பொதுக்குழுவில் சொன்னேன். உடனே ஊடகங்கள் பெரிய அளவில் விவாதங்கள் நடத்தியது. இதை பெரிது பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். விமர்சனம் செய்தார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. விவாதம் நடத்துவதற்கு எதுவும் இல்லை; மக்கள் மனதில் இருப்பதைத் தான் நான் சொன்னேன். கொரோனா வந்த பின் ஆட்சி என்று ஒன்று இங்கு இருக்கிறதா? கொரோனாவை விட கோமா நிலையில் இன்றிருக்கும் அதிமுக ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. இதுதான் கொரோனாவை ஒழிக்கும் லட்சணமா, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுதான் மக்களின் கேள்வி.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்டார்கள். அரியலூர் அனிதாவில் தொடங்கி, பெருவலூர் பிரதீபா, கூனிமேடு மோனிஷா, திருப்பூர் ரீது, பட்டுக்கோட்டை வைஷ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிதுர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால். இவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? தற்கொலை என்று கூட சொல்லமாட்டேன். கொலை நடந்துள்ளது. இவர்களை மத்திய-மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். 13 பேர் கொலைக்கு யார் காரணம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு முழுக் காரணம்.

ஒரு பத்திரிகையில் தலைப்பு செய்தி என்ன தெரியுமா? 13 மாணவர்கள் தற்கொலைக்கு தி.மு.க.,தான் காரணம் என்று போட்டுள்ளார்கள். அது சட்டமன்றத்தில் பேசியது. இப்போது நான் சொல்கிறேன். கொலைக்கு காரணம் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான். இந்த சட்டமன்றத்தில் தி.மு.க.,தான் நீட் பிரச்சனையை கொண்டு வருகிறது. தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க.,தான் கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்று முதன் முதலில் திமுகதான் குரல் எழுப்பி அதற்கு பிறகு ஏற்றுக்கொண்டு, ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி 2 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பினோம்.

இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. வேலை வெட்டி இல்லாதது போல சேலம் டூ சென்னை, சென்னை டூ சேலம், இப்படி சுற்றிக்கொண்டிருந்தவர் இந்த கொரோனா காலத்தில் ஊர் ஊராக சுற்றத் தொடங்கி விட்டார். நீங்கள் என்ன சுற்றிக் கொண்டு வந்தாலும் உங்களுடைய பாச்சா பலிக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை. மத்திய அரசுக்கு அடிபணிந்து கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு அடிமை ஆட்சியை தலையாட்டி பொம்மையாக நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்களே தவிர இந்த அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். அதைத்தான் இந்த முப்பெரும் விழாவில் நாமும் சபதம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : suicide ,governments , NEET Exam, DMK
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை