தேவாரத்தில் வேளாண்மை கல்லூரி அமையுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு

தேவாரம்: தேவாரம் பகுதிகளில் வேளாண்மை விவசாய கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைபெரியாறு அணை மூலம் இரண்டுபோக நெல் விவசாயம் நடக்கிறது. கூடலூர் தொடங்கி கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், பழனிசெட்டிபட்டி வரை அதிகளவில் நெல் விவசாயம் நடக்கிறது. இதேபோல் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரத்தில் மானாவாரி கரும்பு, நிலக்கடலை, கப்பை, சோளம், உள்ளிட்ட விவசாயமும் அதிக ஏக்கர் பரப்பில் செய்யப்படுகிறது. திராட்சை விவசாயத்தின் கேந்திரமாக காமயகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட ஊர்களும், வாழைவிவசாயமும் அதிகமான ஏக்கர்பரப்பில் இந்த பகுதிகளில் நடக்கிறது. எனவே மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதிகளில் அரசினால் வேளாண்மை விவசாய கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பெரியகுளத்தில் தோட்டக்கலை கல்லூரி உள்ளது. அதேபோல் கம்பம் பள்ளத்தாக்கில் தேவாரத்தை மையமாக கொண்டு வேளாண்மை விவசாய கல்லூரி அமைக்கப்பட்டால் மாணவர்களின் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் விவசாயிகளுக்கு ஆராய்ச்சியின் மூலம் புதிய, புதிய பயிர்கள், விதைகள் கிடைக்கும். எனவே வேளாண்மை விவசாய கல்லூரி அமையும் பட்சத்தில் கம்பம் தொகுதியும் வளர்ச்சிப்பாதையில் செல்ல ஏதுவாக இருக்கும். கவுன்சிலிங் நடக்கும்போது இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேளாண்மை கல்லூரிகள் உள்ள கோவை, திருச்சி மாவட்டத்தை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து தேனிமாவட்டத்தை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும். எனவே தமிழக அரசு கம்பம் பள்ளத்தாக்கில் வேளாண்மை விவசாய கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பி.எஸ்.சி.,(வேளாண்மை), எம்.எஸ்.சி.(ஆராய்ச்சி படிப்புகள்) படிக்கும் மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாணவர்கள் நலன்கருதியும் விவசாயத்தில் அரிய வகை கண்டுபிடிப்புகள், நஷ்டமில்லாத வேளாண்மைமுறையை கருத்தில் கொண்டும் கம்பம் பள்ளத்தாக்கில் உடனடியாக அரசின் வேளாண்மை விவசாய கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: