×

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொலைதொடர்பு சேவை பழுதானதால் கடந்த மூன்று நாட்களாக ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களாக உள்ளவர்கள் நேரில் வந்து கைரேகை பதிவு செய்து பெற வேண்டும். அதன்படி, கடைகளில் உள்ள மின்னணு இயந்திரங்களில் கைரேகையை பதிவு செய்த பின்னரே பொருட்களை பெறுவதற்கான இணையதளத்திற்குள் சென்று விற்பனையாளர் பொருட்களை பதிவு செய்ய முடியும். ஆனால், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முறையாக இயங்காததால் சிக்னல் கிடைக்காமல் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும், இணையதள சேவையும் முடங்கி உள்ளது.

இதனால், இப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு மக்கள் கடந்த மூன்று நாட்களாக அலைந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ration shops , Ration Shop, Cuddalore
× RELATED ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை ரத்து