×

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 218 ஏக்கர் சதுப்பேரி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது எப்போது?

வேலூர்: வேலூர் மாநகரின் நிலத்தடி நீராதாரத்தின் ஆணிவேராக விளங்கும் ஏரிகளில் சதுப்பேரி முக்கிய இடத்தை வகிக்கிறது. 205 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சதுப்பேரி 3.2 கி.மீ நீளமும், 218 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. இந்த ஏரி மூலம் 1,586 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. இந்த ஏரிக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது பாலாற்றில் வரும் நீர்தான். இதற்காக விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து சதுப்பேரிக்கு 9 கி.மீ தூரத்துக்கு நீர்வரத்துக்கால்வாயும் உள்ளது.

கர்நாடகம், ஆந்திர மாநிலங்களின் அடாவடி மற்றும் பாலாற்றை ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மூலம் காணாமல் செய்ததால் இந்த ஏரிக்கான நீர்வரத்து முற்றிலும் தடைபட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டங்கள் மூலம் இந்த ஏரி இரண்டு முறை தூர்வாரப்பட்டதுடன், அதன் கரைகளும் பலப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று அப்போதே சதுப்பேரி, மேல்மொணவூர் கிராமங்களை சேர்ந்த மக்களும்,  விவசாயிகளும் புகார்களை தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப அதன் கரை முழுவதும் தற்போது வலுவிழந்து நீர் நிரம்பினாலும் கசியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் சதுப்பேரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் முளைத்துள்ளன. வீடுகள், வணிக வளாகங்கள் என கட்டப்பட்டுள்ளன. இதுதவிர செங்கல் சூளைகளும் அமைந்துள்ளன. இதுபற்றி நாளிதழ்களில் படங்களுடன் செய்தி வெளியான நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளே துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் தற்போது ஏரியின் நீர்த்தேக்கப்பகுதிகள் தூர்ந்து, கருவேல மரங்கள், செடிகள், முட்புதர்கள் மண்டி தூர்ந்து போயுள்ளது. வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் இந்த ஆண்டு நல்ல பலனை கொடுக்கும் என்று பேசப்படும் நிலையில் சதுப்பேரியை சீரமைப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அதன் கரைகள் வலுவிழந்ததற்கு அதன்மேல் நடைபெறும் மணல் மாட்டு வண்டிகளின் போக்குவரத்தும், வாகன போக்குவரத்தும்தான். கரை பலமிழக்கும் என்பதால் போக்குவரத்தை தடை செய்வதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. அதேநேரத்தில் ஏரியில் விரைவில் புதர்களும், செடி, கொடிகளும் அகற்றப்படுவதுடன், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றப்படும்’ என்றனர்.

Tags : Public Works Department , PWD, groundwater
× RELATED கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி...