×

சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்றை தூர்வாராததால் மண்மேடாக மாறிய அவலம்

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரவனாறு உள்ளது. இந்த ஆற்றில் கனமழை காலங்களில் நெய்வேலி என்எல்சியின் உபரி நீரும், மழை நீரும் சேர்ந்து ஆயிரக்கணக்கான கனஅடியில் தண்ணீர் செல்லும் போது பரவனாற்று பாலத்தை மூழ்கடித்து செல்லும் அச்சம் இருந்து வருகிறது. ஏற்கனவே தூர்வாராமல் இருந்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் வாலாஜா ஏரி உடைப்பு ஏற்பட்டு கரைமேடு கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் நெய்வேலி என்எல்சியிலிருந்து வெளியேறும் உபரி நீரும் நெய்வேலி சுற்றுப்புறத்திலிருந்து வடிகாலாகும் காட்டாற்று மழை நீரும் கலந்து பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு மருவாய் கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிரும் மூழ்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அப்போதே கடலூர் மாவட்ட நிர்வாகமும் என்எல்சி நிர்வாகமும் இணைந்து நிரந்தர வெள்ளத்தடுப்புக்காக ஒரு பொது செயல் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த முன்வந்து சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் வாலாஜா ஏரி மற்றும் பரவனாற்றை தூர்வாரி வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றது. இதன்மூலம் என்எல்சி நிர்வாகத்தால் வாலாஜா ஏரியும் பரவனாறும் புத்துயிர் பெற்றது. மேலும் பாசன பகுதியாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு என்எல்சி மற்றும் நீர்வள ஆதார அமைப்பு உயர் அலுவலர்களையும், ஒரு தொழில்நுட்ப வல்லுனர் குழுவையும் அமைத்து தேசிய நெடுஞ்சாலையான விகேடி சாலையில் மருவாய் கிராம பகுதியில் வாய்க்காலில் ஏற்பட்டிருந்த உடைப்புகளையும் என்எல்சி நிர்வாகம் சீரமைத்து கொடுத்தது. இதன்பிறகு பொதுப்பணித்துறையினர் சரிவர பரவனாறு மற்றும் வாலாஜா ஏரியை பராமரிக்காததால் மீண்டும் அதே நிலை வந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இணைந்து வாலாஜா ஏரியையும், பரவனாற்றையும் தூர்வாரி அங்கு வளர்ந்துள்ள சம்புகளையும், மண்மேடுகளையும் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river ,Sethiyatthoppu ,drought , Sethiyatthoppu, Paravanaru
× RELATED ரோடு போட்ட 10 நாளில் ஜல்லி பெயர்ந்த அவலம்